பிரான்சில் 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏர்பஸ் ஏ340! அதிகாலை 300 பயணிகளுடன் மும்பை வந்தடைந்தது!…
ஆள் கடத்தல் என்ற சந்தேகத்தின் பேரில் 4 நாட்களாக பிரான்சிஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 300 பயணிகளை ஏற்றிச் சென்ற ருமேனிய விமானம் இன்று அதிகாலை மும்பை வந்தடைந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயிலிருந்து 303 பயணிகளுடன் நிகரகுவாவிற்கு புறப்பட்ட விமானம், "ஆள் கடத்தல்" என்ற சந்தேகத்தின் பேரில், பிரான்சிலிருந்து கிழக்கே 150 கிமீ தொலைவில் உள்ள வட்ரி விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை தரையிறக்கப்பட்டது. ருமேனிய நிறுவனமான லெஜண்ட் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் விமானத்தை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தனது பயணத்தைத் தொடங்க பிரெஞ்சு அதிகாரிகள் அனுமதித்த பின்னர் நேரடியாக விமானம் மும்பைக்குத் திரும்பியது.
மார்னே மாகாணத்தின் படி, விமானத்தில் 276 பயணிகள் இருந்தனர். உண்மையில், இரண்டு சிறார்கள் உட்பட 25 பேர் தஞ்சம் கோர விருப்பம் தெரிவித்து, இன்னும் பிரான்சில் உள்ளனர். இன்று நீதிபதி முன் அழைத்து வரப்பட்ட மேலும் இருவர் விடுவிக்கப்பட்டு உதவி சாட்சியாக வைக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தடுத்து நிறுத்தப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் தங்களை பிரான்ஸ் நாட்டிலேயே அகதிகளாக ஏற்றுக் கொள்ளும்படி கோரிக்கை முன்வைத்து இருப்பதாக மார்னே பிராந்திய மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் சில பயணிகள் தாங்கள் இந்தியாவிற்கு செல்ல விரும்ப வில்லை என்றும், ஏனென்றால் அவர்கள் நிகாராகுவாவுக்கு சுற்றுலா செல்ல கட்டணம் செலுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் மனித கடத்தல் தொடர்பான சாத்தியங்களை விமான நிறுவனம் மறுத்துள்ளது.