'ரூ.100 க்கு பதில் ரூ.8,75,000 மின் கட்டணம்!' குறுஞ்செய்தியை பார்த்து ஷாக் ஆன விவசாயி..!
மாதம் 100 ரூபாய்க்குள் மின் கட்டணம் செலுத்திவந்த ஓசூரைச் சேர்ந்த விவசாயிக்கு ரூ.8.75 லட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின்சார கட்டணம் வந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சின்னட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது குடும்பத்தினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளாதல் தினமும் காலையிலேயே வேலைக்குச் சென்றுவிடுவார்கள். பகல் நேரத்தில் பெரும்பாலும் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள்.
இந்நிலையில், கடந்த வாரம் வெங்கடேஷின் மொபைலுக்கு வழக்கம்போல மின்கட்டணம் தொடர்பான மெசேஜ் மின்சார வாரியத்திலிருந்து வந்துள்ளது. அதில் 8,75,000 ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருப்பதைக் கண்டு வெங்கடேஷ் அதிர்ச்சி அடைந்தார்.
பெரும்பாலான நேரங்களில் வீட்டில் யாரும் இல்லாததால், மின்சார பயன்பாடு மிகவும் குறைவாகவே இருந்துவருகிறது. தமிழக அரசு அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதால், வீட்டின் மாதாந்திர மின்கட்டணம் 100 ரூபாய்க்குள்தான் வரும். இந்நிலையில், 8,75,000 ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என வந்த குறுஞ்செய்தி அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
உடனே அவர் மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்புகொண்டு புகார் கொடுத்தார். அவருக்கு விளக்கமளித்த ஓசூர் கோட்ட மின்வாரியப் பொறியாளர் குமார், மின்சார பயன்பாட்டு அளவைக் கணினியில் பதிவுசெய்தபோது தவறு நிகழ்ந்துவிட்டது என்று தெரிவித்தார். தவறு சரிசெய்யப்பட்ட பின்பு சரியான மின் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும் என்றும் இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.