வயநாடு மக்களவை தொகுதிக்கு நவ.13 இடைத்தேர்தல்..!! - தலைமைத் தேர்தல் ஆணையர்
கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். இதனையடுத்து 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி இம்முறை போட்டியிட்டு இரு தொகுதிகளிலுமே வென்றார். வயநாடு மக்களவை தொகுதியில் இந்த முறை 6,47,445 வாக்குகளை ராகுல் காந்தி பெற்றார். இத்தொகுதியில் பதிவான வாக்குகளில் 59.69% வாக்குகளை ராகுல் காந்தி பெற்றிருந்தார்.
மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதி எம்பி பதவியை தக்க வைத்துக் கொண்டு வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் அதே நாளில் வயநாடு மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தமது தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனவும் ராகுல் காந்தி அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்க இருக்கிறார்.
இந்த நிலையில் வயநாடு மக்களவை தொகுதியில் நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதோடு, மகாராஷ்டிரத்துக்கு நவ. 20ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்றும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவ. 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.
வயநாடு மக்களவை தொகுதியில் வரும் 18-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. அக்டோபர் 25-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசிநாள். வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 30-ந் தேதி. வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ந் தேதி நடைபெறும்.
Read more ; கனமழையால் Airtel, Jio-க்கு பாதிப்பு வருமா..? அவசர கட்டுப்பாட்டு மையத்திலேயே முகாமை போட்ட அதிகாரிகள்..!!