புழுதிப்புயல் கோரத்தாண்டவம்!… ராட்சத பேனர் விழுந்ததில் 8 பேர் பலி!... 64 பேர் படுகாயம்!
Dust Storm: மும்பையில் பலத்த காற்றுடன் புழுதிப்புயல் வீசியதில் ராட்சத பேனர் சரிந்து விழுந்ததில் 8 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சில இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. இதன் தாக்கத்தை குறைக்கும் வகையில் தற்போது பலத்த காற்றுடன் கோடை மழையும் ஆங்காங்கே பெய்துவருகிறது. இதனால் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்தவகையில், நேற்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று பலத்த புழுதிப்புயலுடன் கூடிய மழை பெய்தது. தானே, பால்கர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புழுதிப்புயல் வீசியது. காற்றுடன் கூடிய மழையும் பெய்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
மேலும் தாதர், குர்லா, மாஹிம், காட்கோபர், முலுண்ட் மற்றும் விக்ரோலி ஆகிய புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது, அதே நேரத்தில் தானே, அம்பர்நாத், பத்லாபூர், கல்யாண் மற்றும் உல்ஹாஸ்நகர் ஆகிய நகரங்களிலும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. மின்சேவை துண்டிக்கப்பட்டது, ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன. காட்கோபர் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் விளம்பர பலகை விழுந்ததில் 8 பேர் பலியானர். மேலும் 64 பேர் காயமுற்றனர்.
மேலும் 100 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியதாக அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தார். இதையடுத்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ஷிண்டே அறிவித்துள்ளார்.
Readmore: குழி, வேலி, மா, ஏக்கர், சதுர அடி, கிரவுண்டு! நிலத்தின் அளவுகள் குறித்து தெரியுமா?