For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Seeman: திமுக அரசு இந்த முடிவை உடனே கைவிட வேண்டும்...! நாம் தமிழர் சீமான் கண்டனம்...!

09:53 AM Mar 17, 2024 IST | 1newsnationuser2
seeman  திமுக அரசு இந்த முடிவை உடனே கைவிட வேண்டும்     நாம் தமிழர் சீமான் கண்டனம்
Advertisement

பிஎம் ஸ்ரீ பள்ளிகளை’ தமிழகத்தில் தொடங்கும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது என‌ சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசால் உருவாக்கப்பட்டுள்ள வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றி ‘பிஎம் ஸ்ரீ பள்ளிகளை’ தமிழகத்தில் தொடங்கும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது. தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது தமிழகத்தில் அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், தற்போது மெல்ல மெல்ல பாஜகவின் புதிய கல்விக் கொள்கையை நுழைப்பது தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் கொடுஞ்செயலாகும்.

புதிய கல்விக் கொள்கையின் அனைத்து கூறுகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்த மோடி அரசால் உருவாக்கப்பட்டுள்ள மாதிரிப் பள்ளி திட்டம்தான் பிஎம் ஸ்ரீ பள்ளிகளாகும். அதனை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த விருப்பம் தெரிவித்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள திமுக அரசு புதிதாக குழு அமைத்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

பொதுப் பட்டியலிலுள்ள கல்வியை, மத்திய பட்டியலில் இருப்பது போலக் கருதிக்கொண்டு ஒற்றை மயத்தையும், காவிக் கொள்கையையும் திணிக்கும் பொருட்டு மோடி அரசால், எதேச்சதிகாரப் போக்கோடு உருவாக்கப்பட்ட தேசியக் கல்விக்கொள்கைக்கு மாற்றெனக் கூறி, புதிதாக மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்தது திமுக அரசு.

மத்திய அரசு மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவதை கைகட்டி வேடிக்கைப் பார்த்த ஒரு துரோகம் போதாதா? மக்களை இன்னும் எவ்வளவு காலம் இப்படி ஏமாற்றப்போகிறீர்கள்? இந்திய அரசின் கல்விக்கொள்கையை ஏற்க நினைக்கும் திமுக அரசின் கொள்கை நிலைப்பாடும், நிர்வாகச் செயல்பாடும் தமிழக மாணவர்களுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல; திராவிட ஆட்சியின் மூலவரான அறிஞர் அண்ணா அவர்களுக்கே செய்யும் கொடுந்துரோகமாகும்.

இவ்விவகாரத்தில் திமுக அரசு இனியாவது தனது தவற்றை உணர்ந்து, பாஜகவின் வர்ணாசிரம கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் தொடங்கும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, சமூகநீதி அடிப்படையில் தனித்துவமிக்க மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்

Advertisement