கலிபோர்னியாவை பீதியில் ஆழ்த்திய காட்டுத்தீ.. பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு..!!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் பலி ஆனோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவத்தொடங்கியது. பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதனிடையே, காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகி வருகின்றன
லாஸ் ஏஞ்சல்ஸில் பரவிய காட்டு தீ பாலிசேட்ஸ், ஈட்டன், ஹர்ஸ்ட், லிடியா ஆகிய பகுதிகளில் கட்டுக்கடங்காமல் தீ பரவி வருகிறது. தற்போது காட்டுத் தீ பரவும் பகுதிகளில் இருந்து சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் கடந்த 4 நாட்களில் சுமார் 40,000 ஏக்கர் முழுவதும் தீ பற்றியுள்ள நிலையில் 29,000 ஏக்கர் பகுதி முழுமையாக தீயில் கருகிவிட்டது. சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மிகப்பெரிய வணிக கட்டிடங்கள் தீக்கிரையாகி உள்ளன. தொடர்ந்து சுமார் 30,000-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.
இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் 16 பேர் காணவில்லை.. காயமடைந்தவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர், ஆனால் பலத்த காற்று அவர்களின் முயற்சிகளை மேலும் கடினமாக்குகிறது. காட்டுத் தீ தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Read more ; திக்!. திக்!. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!. சறுக்குகள் வழியே வெளியேறிய பயணிகள்!. 4 பேர் படுகாயம்!.