ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்...! கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க மே 25-ம் தேதி வரை கால அவகாசம்...!
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க மே 25-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு.
இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான 2024-25 கல்வியாண்டிற்கு பொதுமாறுதல் கலந்தாய்வு மே-2024 மாதம் தொடங்கி, நடத்திட அரசளவில் ஆணை பெறப்பட்டு, கலந்தாய்விற்கான உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டது. மேற்படி உத்தேச காலஅட்டவணையில் பொதுமாறுதல் கலந்தாய்வில் விருப்பமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்க 13.05.2024 முதல் 17.05.2024 முடிய கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS website) பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது 2024-25ம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள பொதுமாறுதல் கலந்தாய்விற்கு, முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஆர்வத்துடன் ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அதே போல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்காக தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளதை காணமுடிகிறது. இடையில் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் போது கல்வி தகவல் மேலாண்மை முகமை இணையதளத்தில் (EMIS Website) தொழில்நுட்பக் கோளாறும் ஏற்பட்டிருந்தது.
பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து மாறுதலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅளவை கூடுதலாக 7 நாட்களுக்கு நீட்டித்து 25.05.2024 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கலந்தாய்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரிந்து வரும் பள்ளியில் ஓராண்டு பணிமுடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையினையை கடைபிடிக்க தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.