தை அமாவாசை: முன்னோர்களின் சாபம் நீங்கி நல்ல காரியங்கள் தடையின்றி நடக்கும்!… சிறப்புகளும்! பலன்களும்!
நம்முடன் வாழ்ந்து மறைந்த நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் பித்ரு சாபத்திற்கு ஆளாகின்றனர். அப்படி சாபம் பெற்றவர்களுக்கு சுப காரிய தடைகள் நிறைய ஏற்படும். தடைகள் நீங்குவதற்கு நாம் தை அமாவாசை தர்ப்பணம் அளிக்க வேண்டும். இதன் மூலம் முன்னோர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். அந்தவகையில் தை அமாவாசையான இன்று காலை 08.05 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 10 ஆம் தேதி 2024 அன்று அதிகாலை 4:28 மணிக்கு முடியும். திதி கொடுக்க உகந்த நேரம் காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை ஆகும். இந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம்.
மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் 9ஆம் பாவம் என்னும் பாக்ய ஸ்தானத்தினால் தீர்மானம் செய்யப்படுகிறது. அந்த ஸ்தானம் வலிமை பெற்றவர்கள் சாதிக்க பிறந்தவர்கள். பாக்ய ஸ்தானத்தை வலிமைப்படுத்த பிரபஞ்சம் வழங்கிய மாபெரும் கொடைகள் இரண்டு. ஒன்று பித்ருக்கள் பூஜை, மற்றொன்று குலதெய்வ வழிபாடு.
ஜோதிடப்படி மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு அவர்களின் ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.
ம்முடைய வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் மகிழ்ச்சியடைகிறோம். நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களே பித்ருக்கள் அவர்கள் தங்களது சந்ததியினர் பாக்ய பலம் பெற, வாழ்வில் முன்னேற, தடைகள் அகல, பல தோஷங்கள் நிவர்த்தியாக வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களுக்கு பூலோகம் வந்து ஆசி வழங்குவதாக ஐதீகம். அதில் அமாவாசை நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும். அந்த நாளில் நாம் மிகவும் மனம் மகிழ்ச்சியுடன் முன்னோர்களை வரவேற்று தர்ப்பணம் அளிக்கவேண்டும்.
அமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு, வலது ஆள் காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக நீரை வார்த்து தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும்.
தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும். தடைபட்ட சுபகாரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். வாட்டி வதைத்த நோய்கள் அகலும். மனக்கவலை நீங்கி மனதில் மகிழ்ச்சி பொங்கும்.