மாணவிகளுக்கு மது கொடுத்த விவகாரம்.. அறையிலிருந்து அலறி அடித்து ஓடி வந்த மாணவிகள்..!! - சிக்கிய சிசிடிவி
திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் உடற்பயிற்சி ஆசிரியர் பென்சிங் கைது செய்யப்பட்ட நிலையில், தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து மாணவிகள் அலறி அடித்தும் ஓடும் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் உள்ள தனியார் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருப்பவர் பொன்சிங் (42). இவர், சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த விளையாட்டு போட்டிக்கு மாணவிகளை அழைத்துச் சென்று, மதுபானத்தை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுபற்றி தகவலறிந்த மாணவிகளின் பெற்றோரும், உறவினர்களும் நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது உடற்கல்வி ஆசிரியர், பள்ளி செயலாளர், பள்ளி முதல்வர் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தினர். இதையடுத்து உடற்கல்வி ஆசிரியரை தனிப்படையினர் கோவையில் கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கின் குற்றத்தை மறைக்க உடந்தையாக இருந்ததாக பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்டி (44), செயலாளர் செய்யது அகமது (61) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.
கைதான பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்டி, செயலாளர் செய்யது அகமதுவிடம் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடந்த போது அடுத்தடுத்து நெஞ்சுவலிப்பதாக கூறியதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் பென்சிங்கை போலீசார் ஆஜர்படுத்திய நிலையில் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சார்லஸ் ஸ்வீட்லின் மற்றும் சையத் அகமது மனு தாக்கல் செய்த நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. பள்ளி மாணவிகளை தூத்துக்குடியில் தங்க வைத்த தனியார் தங்கும் விடுதியில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினார். விடுதியில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
மேலும் மாணவிகளை அழைத்து வருவது, மது பாட்டில்களை மாணவிகள் இருந்த அறைக்குள் எடுத்துச் செல்வது, சிறுமிகள் விடுதி அறையில் இருந்து பயத்துடன் வெளியே வருவது உள்ளிட்ட காட்சிகள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more ; ”தமிழ்நாட்டில் 2 கட்சிகளுக்குமே மக்களை பற்றிய அக்கறை இல்லை”..!! சென்னை ஐகோர்ட் காட்டம்..!!