மோடி ஆட்சியின் 100வது நாள்.. இதுவரை 38 ரயில் விபத்துகள்..!! இதுதான் உங்கள் சாதனையா? காங்கிரஸ் விமர்சனம்
18-வது மக்களவைத் தோ்தல் முடிவில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது. பிரதமராக நரேந்திர மோடி தொடா்ந்து மூன்றாவது முறையாக கடந்த ஜூன் 9-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அவருடன் 72 அமைச்சா்கள் கொண்ட மத்திய அமைச்சரவையும் பதவியேற்றது. தோ்தலுக்கு முன்னதாகவே அடுத்த ஆட்சியில் முதல் 100 நாள்களுக்கான செயல்திட்டத்தை தயாா்ப்படுத்திக்கொள்ளுமாறு அமைச்சகங்களுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் முதல் 100 நாள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள், 21 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மோடி அரசு தோற்றுவிட்டதாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 3வது முறை ஆட்சியில் பிரதமர் மோடியின் அரசு தோற்றுவிட்டது. பிரதமர் மோடியின் முதல் 100 நாள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள், 21 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்தின்படி கடந்த 10 ஆண்டுகளில் பலவிதமான ரயில் விபத்துகளில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியின் அலட்சிய போக்கினால் ரயில்வே துறை சீரழிந்ததைப் போல எந்த ஆட்சிக் காலத்திலும் நிகழ்ந்ததில்லை என காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.