”வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருது”..!! சும்மா இருந்தே லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞர்..!! ஆண்டுக்கு ரூ.70 லட்சம் கிட்ட சம்பாதிக்குறாரு..!!
இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதே மிகப்பெரிய போராட்டமாக இருந்து வருகிறது. படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலைக்கு செல்லும் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு இளைஞர், எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பதையே வேலையாக மாற்றி, லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
நடிகர் வைகைப்புயல் வடிவேலு ”கற்க கசடற” படத்தில் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? எனக்கூறி பஞ்சாயத்தை கூட்டி ஒரு காட்சியில் நடித்திருப்பார். அந்த காமெடிக் காட்சி இன்றளவும் வைரல் தான். ஆனால், நிஜ வாழ்க்கையில் எப்படி சும்மா இருக்க முடியும் என்று நாம் யோசித்து இருப்போம். ஆனால், ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் எந்த வேலையும் செய்யாமல், சும்மா இருந்தே பல லட்சம் சம்பாதித்து வருகிறார்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஷோஜி மோரிமோட்டோ (வயது 35) என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு தனது வேலையை இழந்தார். உடனடியாக அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால், சில காலம் வேலைக்கு எதுவும் செல்லாமல் சும்மாவே இருந்துள்ளார். பின்னர், அதையே ஒரு வேலையாக மாற்றியுள்ளார். அதாவது, இவர் தன்னைத் தானே வாடகைக்கு விட்டுள்ளார். Rental do-nothing என்ற அடிப்படையில் இவர் தன்னை வாடகைக்கு விடுகிறார்.
அதாவது இவர் எந்தவொரு வேலையும் செய்ய மாட்டார். தன்னை வாடகைக்கு எடுப்போருடன் சும்மா இருப்பார். ஏற்கனவே, ஜப்பானில் இப்போது தனிமை தான் மிகப் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்களால் மற்றவர்களுடன் பேச முடியாத சூழலே நிலவுகிறது. இதனால் அங்குள்ளவர்கள் இவரைப் போட்டிப் போட்டுக் கொண்டு வாடகைக்கு எடுக்கின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் மோரிமோட்டோ சுமார் $80,000 (அதாவது இந்திய மதிப்பில் ரூ. 69 லட்சம்) சம்பாதித்துள்ளார். இவரை வாடகைக்கு எடுக்கும் நபருடன் இவர் நண்பனைப் போல இருப்பார். எதாவது அவர்கள் பேசினால் பேசுவார். அவர்கள் புலம்பினால் காது கொடுத்துக் கேட்பார். மேலும், வாடகைக்கு எடுக்கும் போதே எதற்காக வாடகைக்கு எடுக்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் கேட்டுக்கொள்வார். வாடகைக்கு எடுத்த பிறகு அதை மட்டுமே செய்வார். கூடுதலாக எந்தவொரு விஷயத்தையும் செய்ய மாட்டார்.
அதேநேரம், என்ன நடந்தாலும் எந்தவொரு பாலியல் உறவுகளிலும் ஈடுபட முடியாது என்பதை கண்டிஷனாக வைத்துள்ளார். ஆண்டுதோறும் சுமார் 1,000 பேர் வரை இவரை வாடகைக்கு எடுக்கிறார்களாம். இவர், 2 - 3 மணி நேரத்திற்கு $ 65 முதல் $ 195 வரை (ரூ.5,000 முதல் ரூ.17,000) வரை கட்டணம் வசூலித்து வருகிறார்.