For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”அம்மா உணவகத்தில் நாடகத்தை அரங்கேற்றிய முதல்வர்”..!! எடப்பாடி பழனிசாமி விளாசல்..!!

AIADMK General Secretary Edappadi Palaniswami has alleged that Chief Minister Mukherjee Stalin has staged a drama in the name of Amma restaurant in Chennai.
01:48 PM Jul 20, 2024 IST | Chella
”அம்மா உணவகத்தில் நாடகத்தை அரங்கேற்றிய முதல்வர்”     எடப்பாடி பழனிசாமி விளாசல்
Advertisement

சென்னை அம்மா உணவகத்தில் ஆய்வு என்ற பெயரில் முதல்வர் முக.ஸ்டாலின் நாடகத்தை நடத்தியுள்ளார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “2021-ல் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அம்மா உணவகங்களை திமுக நிர்வாகிகள் கடப்பாரை போன்ற ஆயுதங்களால் இடித்துத் தள்ளினர். அம்மா உணவகங்களில் பணிபுரிந்தவர்களை குறைத்தும், அம்மா உணவகங்களை நடத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்காமலும், தேவையான அரிசி, காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை தரமாக வழங்காமல் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் உழைப்பாளிகள் வயிராற உண்ணும் உணவின் தரத்தைக் குறைத்து பல அம்மா உணவகங்களுக்கு மூடு விழாவும் நடத்தியது விடியா திமுக அரசு.

விடியா திமுக அரசின் மேற்கண்ட செயல்பாட்டினை உடனடியாக அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வாயிலாக கடுமையாக எதிர்த்தேன். இதையடுத்து, அம்மா உணவகங்களை மூடும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்தியது. உண்மை நிலை இவ்வாறு இருக்க, நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் முதலமைச்சர் 19.7.2024 அன்று, தனது எக்ஸ் வலைதளத்தில் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியதாக முதலைக் கண்ணீர் வடித்துள்ளார். மேலும், தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சர் ஆய்வுக்கு வருவார் என்று முன்னதாகவே அம்மா உணவகத்திற்கு தெரிவிக்கப்பட்டு அங்கு தரமாக உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. எஞ்சிய அம்மா உணவகங்களில் நேற்று நடைபெற்றதை போல் கடந்த மூன்றாண்டுகளில் எத்தனை முறை உணவின் தரத்தை அதிகாரிகளோ, விடியா திமுக அமைச்சர்களோ சோதித்தனர் என்று முதலமைச்சர் விளக்குவாரா? ஆய்வு செய்வதாக ஒரு நாடகத்தை முதலமைச்சர் அரங்கேற்றியுள்ளார். அம்மா ஆட்சியில் சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்த நிலையில், மூன்றாண்டுகளில் அதை உயர்த்தாமல், சுமார் 19 அம்மா உணவகங்களை மூடியுள்ளது திமுக அரசு. ஸ்டாலின் இதற்கு என்ன பதிலளிக்கப் போகிறார்?

இனியாவது வாய் பந்தல் போடாமல், உண்மையிலேயே ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் உழைப்பாளிகளுக்கு சுவையுள்ள உணவு வகைகளை வழங்கவும், மூடியுள்ள உணவகங்களை திறப்பதுடன், மேலும் புதிய அம்மா உணவகங்களை, அம்மா ஆட்சியின்போது செயல்பட்டதை போல் முழுமையான பணியாட்களுடன், தரத்துடன் இயங்க நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

Read More : ’துணை முதல்வர் பதவி உண்மையா’..? ’எந்த பதவி கொடுத்தாலும்’..!! தனது ஆசையை சொன்ன உதயநிதி..!!

Tags :
Advertisement