தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.20,358 வழங்க வேண்டும்...! மத்திய அரசு அதிரடி
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தொழிலாளர்களுக்கு, குறிப்பாக அமைப்புசாரா துறையில் உள்ளவர்களுக்கு உறுதுணைபுரியும் வகையிலான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய அரசு மாறும் அகவிலைப்படியை (வி.டி.ஏ) திருத்துவதன் மூலம் குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த சரிசெய்தல் உயரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க, தொழிலாளர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கட்டிட கட்டுமானம், ஏற்றுதல் மற்றும் இறக்குதல், அவைக்காவலர், தூய்மைப் பணி, வீட்டு பராமரிப்பு, சுரங்கம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களால் பயனடைவார்கள். புதிய ஊதிய விகிதங்கள் அக்டோபர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும். கடைசி திருத்தம் ஏப்ரல் 2024-ல் மேற்கொள்ளப்பட்டது.
குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் திறன் நிலைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன - திறமையற்றவர்கள், அரை திறமையானவர்கள், திறமையானவர்கள் மற்றும் மிகவும் திறமையானவர்கள் - அத்துடன் புவியியல் பகுதி - ஏ, பி மற்றும் சி. திருத்தத்திற்குப் பிறகு, கட்டுமானம், தூய்மைப்பணி, ஏற்றுதல் மற்றும் இறக்குதல் ஆகியவற்றில் உள்ள ஏ பகுதியில் குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் ஒரு நாளைக்கு ரூ.783 (மாதத்திற்கு ரூ .20,358), அரை திறமையான ரூ.868 ஒரு நாளைக்கு (மாதத்திற்கு ரூ.22,568), திறமையானவர்கள், எழுத்தர்கள் மற்றும் அவைக்காவலர்கள் ஒரு நாளைக்கு ரூ .954 (மாதத்திற்கு ரூ.24,804) மற்றும் மிகவும் திறமையான மற்றும் வாட்ச் & வார்டு ஒரு நாளைக்கு ரூ.1,035 (மாதத்திற்கு ரூ.26,910).
தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டில் ஆறு மாத சராசரி அதிகரிப்பின் அடிப்படையில், ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 1 வரை மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை வி.டி.ஏவை திருத்துகிறது. துறை, பிரிவுகள் மற்றும் பகுதி வாரியாக குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் பற்றிய விரிவான தகவல்கள், இந்திய அரசின் தலைமை தொழிலாளர் ஆணையரின் இணையதளத்தில் (clc.gov.in) கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.