300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு... நாட்டை உலுக்கிய வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பாதிப்பாக அறிவித்த மத்திய அரசு...!
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு வலியுறுத்தி வந்தது. தற்போது வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பாதிப்பாக அங்கீகரித்துள்ளது மத்திய அரசு.
கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலை வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை ஆகிய இரு கிராமங்கள் கனமழை, நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதைந்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, கேரளா அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
நென்மேனி பஞ்சாயத்து அம்புகுத்தி மலைத்தொடரில் அமைந்துள்ள 7 ரிசார்ட்டுகள் மற்றும் விதி மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், குளங்கள் உள்ளிட்டவற்றை 15 நாட்களுக்கு இடிக்க, வயநாடு சப்-கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உத்தரவை நிறைவேற்றாத பட்சத்தில், ஜனவரி 8ம் தேதி கட்டாயம் விளக்கமளிக்க வேண்டும். நென்மேனி கிராம அலுவலர் கண்காணித்து அறிக்கை அளிக்கும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் வீடுகளை இழந்த பொது மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் புனரமைப்பு திட்டங்களுக்கு ரூ. 3000 கோடி வழங்க வேண்டும் என்று கேரள அரசு கோரியிருந்தது. ஆண்டு தோறும் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் மாநில பேரிடர் நிதியில் உள்ள ரூ.390 கோடியை வயநாடு பேரிடருக்கு பயன்படுத்தும்படி கடிதத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு வலியுறுத்தி வந்தது. தற்போது வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பாதிப்பாக அங்கீகரித்துள்ளது மத்திய அரசு.