விற்பனையாளர் கவனத்திற்கு... கோதுமை இருப்பு வரம்பை மாற்றி அமைத்த மத்திய அரசு...!
கோதுமை இருப்பு வரம்பை மாற்றி அமைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய அரசு கோதுமையின் விலையை உன்னிப்பாக கண்காணித்து வருவதுடன், நாட்டில் உள்ள நுகர்வோர்களுக்கு கோதுமை நிலையான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு தகுந்த தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு ரபி மாதத்தில் மொத்தம்1132 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால், நாட்டில் கோதுமை போதுமான அளவு கிடைக்கிறது.
ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை நிர்வகிப்பதற்கும், பதுக்கல் மற்றும் நேர்மையற்ற ஊக வணிகத்தைத் தடுப்பதற்கும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வர்த்தகர்கள் / மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஆகியோருக்கு கோதுமையின் இருப்பு வரம்புகளை மத்திய அரசு விதித்தது. குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் மீதான உரிமத் தேவைகள், இருப்பு வரம்புகள் மற்றும் இயக்கக் கட்டுப்பாடுகளை அகற்றுதல் (திருத்தம்) ஆணை, ஜூன் 2024 அன்று வெளியிடப்பட்டது இது செப்டம்பர் அன்று திருத்தப்பட்டது.
கோதுமையின் விலையை மிதப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2025 மார்ச் 31 வரை பொருந்தக்கூடிய கோதுமை இருப்பு வரம்பை வர்த்தகர் / மொத்த விற்பனையாளர் 2000 மெட்ரிக் டன், சில்லறை விற்பனையாளர், ஒவ்வொரு சில்லறை விற்பனை நிலையத்திற்கும் 10 மெட்ரிக் டன் திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து கோதுமை இருப்பு நிறுவனங்களும் கோதுமை இருப்பு வரம்பு போர்ட்டலில் (https://evegoils.nic.in/wsp/login) பதிவு செய்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இருப்பு நிலையை புதுப்பிக்க வேண்டும்.
இந்த இணையதளத்தில் பதிவு செய்யாத அல்லது இருப்பு வரம்புகளை மீறும் எந்தவொரு நிறுவனமும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955 பிரிவு 6 மற்றும் 7 இன் கீழ் தகுந்த தண்டனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும். மேற்கண்ட நிறுவனங்களிடம் உள்ள சரக்குகள் மேற்கண்ட நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருந்தால், அறிவிக்கை வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் அவர்கள் அவற்றை நிர்ணயிக்கப்பட்ட இருப்பு வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.