மாணவர்களுக்கு குட் நியூஸ்..! "ஒரே நாடு, ஒரே சந்தா" மத்திய அரசு புதிய திட்டத்திற்கு ஒப்புதல்...!
ஒரே நாடு, ஒரே சந்தா" என்ற மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, "ஒரே நாடு, ஒரே சந்தா" என்ற மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் எளிமையான, பயனருக்கு உகந்த மற்றும் முழுமையான டிஜிட்டல் செயல்முறை மூலம் நிர்வகிக்கப்படும். இதன் மூலம் கல்விப் புலம் சார்ந்த ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் ஆராய்ச்சி இதழ்களைப் படிக்க முடியும்.இது அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களுக்கான "ஒரே நாடு ஒரு சந்தா" வசதியாக இருக்கும்.
புதிய மத்திய துறைத் திட்டமாக, 2025, 2026 மற்றும் 2027 ஆகிய 3 ஆண்டுகளுக்கு, ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்திற்காக மொத்தம் சுமார் 6,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே சந்தா என்பது, இந்திய இளைஞர்களுக்குத் தரமான உயர்கல்வி கிடைப்பதை அதிகபட்சமாக்குவதற்காக, கல்வித் துறையில் கடந்த பத்தாண்டுகளில் இந்திய அரசு மேற்கொண்ட பல்வேறு முன்முயற்சிகளை மேலும் விரிவுபடுத்தும். இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கும், அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் முழுவதும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முன்முயற்சிக்குத் துணைபுரியும்.
ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்தின் பலன்கள், மத்திய அல்லது மாநில அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும், மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) தன்னாட்சி பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தன்னாட்சி மையமான தகவல் மற்றும் நூலக இணைப்பு என்ற மத்திய நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய சந்தா மூலம் வழங்கப்படும். இந்த பட்டியலில் 6,300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கிட்டத்தட்ட 1.8 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், ஒரே நாடு ஒரே சந்தாவின் பலன்களைப் பெற முடியும்.
உயர்கல்வித் துறை, "ஒரே நாடு ஒரே சந்தா" என்ற ஒருங்கிணைந்த வலைதளத்தை கொண்டிருக்கும். இதன் மூலம் கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சி இதழ்களை அணுகிப் படிக்க முடியும். உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள பிற அமைச்சகங்கள், இந்த நிறுவனங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே ஒரே நாடு ஒரே சந்தா கிடைப்பது மற்றும் அணுகுவதற்கான வழிமுறைகள் குறித்து தகவல், கல்வி மற்றும் தொடர்புசார் பிரச்சாரங்களை முனைப்புடன் நடத்தும், இதன் விளைவாக நாடு முழுவதும் இந்த வசதியின் பயன்பாடு மேம்படும்.