உடலை குத்திக்கிழித்த காளை..!! மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை..!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை போன்று மஞ்சுவிரட்டும் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் மஞ்சு விரட்டு போட்டி பிரபலமாகும். மஞ்சு விரட்டு என்பது ஜல்லிக்கட்டு போட்டி போன்று இருக்காது. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் ஒவ்வொன்றாக வரிசையாக அவிழ்த்து விடப்படும். ஆனால், வயல்வெளியில் நடக்கும் மஞ்சு விரட்டில் ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்படும்.
இதனால் ஒரே நேரத்தில் பல காளைகள் களத்தில் நிற்கும். இதனால் போட்டியை பார்க்க செல்லும் நபர்கள் தங்களின் வாகனங்களின் மீது ஏறி நிற்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதற்கிடையே, கடந்தாண்டு நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காவலர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். அதேபோல், நேற்று சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தாண்டு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று இருவர் உயிரிழந்த நிலையில், மஞ்சுவிரட்டுக்கு அனுமதி வழங்க முடியாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.