அருவியில் குளித்த சிறுவன்!. அமீபா மூளைக்காய்ச்சல் உறுதி!. கேரளாவில் மேலும் இருவர் பாதிப்பு!.
Amoeba: கேரளாவில் கண்ணூர், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மேலும் 2 சிறுவர்களுக்கு மூளையை திண்ணும் அமீபா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சல் நோய் பரவலாக பரவி வருகிறது. கேரளாவில் கடந்த 2 மாதங்களில் 2 சிறுமிகள், 1 சிறுவன் உள்பட 3 பேர் இந்த நோய் பாதித்து மரணமடைந்துள்ளனர். இதனிடையே அமீபா மூளைக்காய்ச்சல் நோய் பாதித்து சிகிச்சையில் இருந்த கோழிக்கோட்டை சேர்ந்த அப்னான்(14) என்ற சிறுவன் தீவிர சிகிச்சையால் உடல்நலம் தேறினான். அமீபா மூளைக் காய்ச்சல் பாதித்து உயிர் பிழைப்பது மிகவும் அபூர்வமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கண்ணூரைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த சிறுவனின் உடல்நிலை மோசமானதால் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளான். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்ணூரில் ஒரு அருவியில் குளித்த பின்னர்தான் இந்த சிறுவனுக்கு நோய் அறிகுறிகள் காணப்பட்டன. இதேபோல் கோழிக்கோட்டில் 4 வயதான மேலும் ஒரு சிறுவன் அமீபா மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.