குவைத் விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல் கொச்சி வந்தடைந்தது..!! தமிழர்களின் உடல்கள் எங்கே..?
குவைத்தில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த, 45 இந்தியர்களின் உடல் விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு நாடான குவைத்தில் உள்ள மங்காப் நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். விசாரணையின் முடிவில் உயிரிழந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள் மற்றும் 3 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. முன்னதாக, உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடலை தாயகம் கொண்டு வருவதற்காக, வெளியுறவு அமைச்சர் கே.வி. சிங் குவைத் விரைந்திருந்தார். இந்நிலையில், உயிரிழந்த 45 பேரின் உடல்களும் ஏற்றப்பட்ட விமானப்படையின் C-130J போக்குவரத்து விமானம் குவைத்தில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டது. காலை 8.30 மணியளவில் கேரள மாநிலம் கொச்சினில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அங்கு உடல்களை மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பெற்றுகொண்டனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் விமானம் கொச்சின் வந்தடைந்தது. அங்கிருந்து, அந்த விமானம் வடமாநில தொழிலாளர்களின் உடலுடன் டெல்லி சென்றடைகிறது. இதற்கிடையே, விமான நிலையம் வந்தடைந்த தொழிலாளர்களின் உடலை அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. மேலும், தமிழர்கள் 7 பேரின் உடல்களும் கொச்சினிலேயே இறக்கப்பட உள்ளன. அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அங்கு விரைந்துள்ளார். கொச்சி விமான நிலையத்தில் இருந்து தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலம், இறந்தவர்களின் உடலை அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Read More : இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் தெரியுமா..? சரித்திரம் படைத்த கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர்..!!