அதிரடி...! வெளி நபர்களுக்கு தடை... இன்று முதல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கட்டுப்பாடு...!
மாலை, இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலர்கள் ரோந்து செல்ல வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அண்ணா பல்கலை. வளாகத்துக்குள் மாணவர்கள் மிதிவண்டியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வகுப்பு நேரங்கள் மற்றும் விடுதி நேரங்களில் மாற்றம் இல்லை. பல்கலை. வளாகத்துக்குள் நடைபெறும் கட்டடப் பணிகளில் ஈடுபடும் கட்டுமானத் தொழிலாளர்கள் எந்த சூழ்நிலையிலும் வேலை நேரத்துக்குப் பிறகு வளாகத்துக்குள் இருக்கக் கூடாது. மாணவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக பணியாளர்கள் மட்டுமே வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர். வெளிநபர்கள் நடைப்பயிற்சி செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாலை, இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலா்கள் ரோந்து செல்ல வேண்டும். வளாகத்துக்குள் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தப்பட்டால் காவல் துறையிடம் புகாா் அளிக்கப்படும். ஆன்லைன் நிறுவன விநியோக மற்றும் உணவு விநியோக ஊழியா்களுக்கு பல்கலை. நுழைவு வாயில் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மாணவா்கள் தங்களது அடையாள அட்டையை எப்போதும் அணிந்திருக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா, மின் விளக்குகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
பாலியல் குற்றத் தடுப்புக்காக அமைக்கப்பட்ட குழு, ஒவ்வொரு மாதமும் கூடி மாணவர்களின் கருத்துகளையும், குறைகளையும் கேட்டறிய வேண்டும். பாதுகாப்பு மற்றும் தற்காப்புக்காக காவல் உதவி செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யுமாறு அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், பேராசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. உரிய அனுமதியுடன் வெளியிலிருந்து வாகனத்தில் வருபவர்கள், தங்களது வாகன எண், கைப்பேசி எண், சுய விவரங்களை பதிவேட்டில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.