டி20 உலகக்கோப்பையில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி..! ஆஸ்திரேலியாவை சம்பம் செய்த குல்பாடின் மற்றும் நவீன் உல் ஹக்..!
AFG vs AUS : கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி, அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் போட்டிகள் நிறைவிபெற்ற நிலையில் சூப்பர் 8 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் நடந்த 47ஆவது ஆட்டத்தில், வங்கதேச அணியை எதிர்கொண்ட இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னணி வகித்து வருகிறது.
இந்த டி20 உலகக்கோப்பை போட்டியின் 48வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது ஆப்கானிஸ்தான் அணி. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான, ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகிம் சார்டான் ஆகியோர் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். அவர்களில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 60 ரன்களிலும், இப்ராகிம் சார்டான் 51 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் ரன்கள் சேர்க்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமாக இலக்குடன் கமிறங்கிய, ஆஸ்திரேலியா அணியை கதி கலங்க வைத்தனர் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள். தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன டிராவிஸ் ஹெட் 0 ரன்னிலும், வார்னர் 3 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இதனையடுத்து களமிறங்கிய மார்ஷ் 12 ரன்களிலும், ஸ்டோய்னிஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். தொடர்ந்து தனி ஆளாக போராடிய மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார்.
14வது ஓவரின் 4வது பந்தில் மேக்ஸ்வெல் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய குல்பாடின் நைப் 4 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
Read More: யூரோ 2024 | ருமேனியாவுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அபார வெற்றி!!