எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைபாடு.. ஆட்சிக்கு வந்த பிறகு விவாசாயிகளுக்கு எதிர்ப்பா..? - திமுகவை விளாசிய விஜய்
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாதங்களாக பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், 910வது நாளாக போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் சந்திக்க காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தார்.
விஜய்யின் கோரிக்கையை ஏற்று, பல்வேறு நிபந்தனைகளை விதித்து போராட்டக்காரர்களை இன்று (20-01-25) சந்திக்க காஞ்சிபுரம் காவல்துறை அனுமதி அளித்திருந்தது. தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய பின்னர் விஜய் முதன்முறையாக களத்திற்கு சென்று மக்களை சந்திப்பது இது முதன்முறை என்பதால், இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கட்சிக் கொடி பொருத்திய பிரச்சார வாகனத்தில் விஜய் பரந்தூர் சென்றார். வழியில் தொண்டர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சார வாகனத்தில் நின்றபடி கட்சி தொண்டர்களுக்கு கையசைத்தபடி வந்தார். விஜய்யின் வாகனத்துக்கு பின்னர் பல்வேறு வாகனங்கள் அணி வகுத்து வந்தன. தொண்டர்கள் வீசிய கட்சி துண்டை கழுத்தில் அணிந்து கொண்டும் கட்சிக் கொடியை கையில் பிடித்துக் கொண்டும் தனியார் மண்டபத்திற்கு சென்றார்.
அப்போது அவர் பேசுகையில், "ராகுல் என்ற சின்ன பையனின் பேச்சு என் மனதை உருக்கியது. அதற்காக தான் உங்களை நேரில் சந்திக்க வந்தேன்.. உங்க எல்லாரோடையும் நா நிப்பேன்.. நம்ம நாட்டுக்கு ரொம்ப முக்கியமானவர்கள் உங்களை மாதிரியான விவசாயிகள் தான்.. உங்களை போன்ற விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு என் பயணத்தை தொடங்குகிறேன். உங்களின் ஆசிர்வாதத்தோடு எனது அரசியல் பயணத்தை தொடங்குகிறேன்.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 13 நீர் நிலைகளை அளித்து, சென்னையை வெள்ள காடாக்கும் இந்த திட்டம் கை விட வேண்டும்.. நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல.. விமான நிலையம் அமைக்க வேண்டாம் என சொல்லல.. அதை இந்த இடத்தில் வேண்டாம் என தான் சொல்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் மழை காலம் சென்னை நீரில் தத்தளிக்கிறது. அதற்கு காரணம் நீர் நிலைகளை அளிப்பது தான்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அரசு தீர்மானம் எடுத்ததை நான் வரவேற்கிறேன்.. அரிட்டாப்பட்டி மக்களை போல தான் பரந்தூர் மக்களும் நம்முடைய மக்கள்.. அதே நிலைப்பாட்டை தான் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எடுக்க வேண்டும் என திமுகவை விளாசினார். எதிர்கட்சியாக இருந்த போது எட்டுவழிச்சாலையை எதிர்த்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவது ஏன்..? உங்களின் லாபத்திற்காக விவசாயிகளை பலிகாடாக்காதீங்க.. உங்களின் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்" என அனல் பறக்க பேசினார்.