மாரடைப்பை உண்டாக்கும் கொழுப்பு..! குறைக்க இந்த உணவுகள் போதும்.!
சமீப காலமாக மாரடைப்புக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதய தமனிகளில் சேரும் கொழுப்பின் காரணமாக இதய நரம்புகளில் செல்கின்ற ரத்தம் தடைப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே அந்த கொழுப்பை எரிக்க சாப்பிடக்கூடிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
தேனில் ஆன்ட்டி ஆக்சிடெண்ட் கள் இருக்கின்றன. இவை உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதை தடுக்கின்றது. வெந்நீர் ஒரு கப் எடுத்து அதில் இஞ்சி சாறு மற்றும் சிறிது தேன், எலுமிச்சை சாறு, ஆப்பிள் வினிகர் சிறிது சேர்த்து கலந்து குடித்தால் தமனிகளில் ஏற்படும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
வெந்தயத்தில் அதிகப்படியான பொட்டாசியம், துத்தநாகம், நார் சத்து, இரும்பு சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அடிக்கடி உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது கெட்ட கொழுப்பை கரைக்க உதவும். இல்லையெனில் வெந்தயத்தை வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு அதை வெந்நீரில் கலந்து அன்றாடம் காலை வேளையில் எடுத்துக் கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். வெந்தயம் இதய கொழுப்பை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ரத்த அழுத்தம், டயாபட்டிக் உள்ளிட்ட பிரச்சினைகளையும் தீர்க்கிறது.
பூண்டில் இருக்கின்ற கந்தகம் ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து அதில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. அன்றாடம் 6-லிருந்து, 8 பல் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அப்படி இல்லை எனில் ஒரு கிளாஸ் வெந்நீரில் பூண்டை நசுக்கி போட்டு சிறிது நேரம் கழித்து குடிக்கலாம்.
நாம் சமையலுக்கு பயன்படுத்துகின்ற மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது கெட்ட கொழுப்பை உடலில் இருந்து அகற்ற முக்கிய பங்காற்றுகிறது. மிதமான சூட்டில் இருக்கும் பாலில் மஞ்சளை கலந்து இரவு தூங்கப் போவதற்கு முன்பு சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் நுரையீரலில் இருக்கும் சளி தொண்டை கரகரப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது.