அயோத்தி ராமர் கோயிலில் அந்த 40 நிமிடம்..!! தனியாக தடம் பதிக்கும் பிரதமர் மோடி..!!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பிரதிஷ்டை செய்யப்படும் ராமர் கோவிலுக்கு சடங்குகளை செய்ய உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி இன்று அயோத்தி ராமர் கோவிலுக்கு எப்போது வருகிறார்? அவர் கும்பாபிஷேக விழாவில் என்ன செய்யப்போகிறார்? என்பது பற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது.
அதன்படி, பிரதமர் மோடி இன்று காலை காலை 10:25 மணிக்கு அயோத்தி விமான நிலையம் வருகிறார். பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டரில் காலை 10.55 மணிக்கு ஸ்ரீராமஜென்ம பூமிக்கு வருகிறார். காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை அவருக்கென நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தனியே நிகழ்ச்சி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த வேளையில் பிரதமர் மோடி ஸ்ரீராமஜென்ம பூமியை சுற்றி வந்து பார்வையிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பிறகு மதியம் 12.05 மணிக்கு அவர் அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகிறார். இதையடுத்து, கும்பாபிஷேக விழா தொடங்கி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகம் என்பது மதியம் 12.30 முதல் 12.45 மணிக்குள் நடைபெறவுள்ளது. இந்த வேளையில் பிரதமர் மோடி கோவில் கருவறையில் 'பிரான் பிரதிஷ்டை' குறிக்கும் சடங்குகளை செய்யவுள்ளார். பிரதமர் மோடியுடன் லட்சுமிகாந்த் தீட்சித் தலைமையிலான அர்ச்சகர்கள் குழு முக்கிய சடங்குகளை நடத்துகிறது. மொத்தம் 40 நிமிடம் பிரதமர் மோடி ராமர் கோவிலில் இருப்பார்.
பிறகு ராமர் கோவிலில் இருந்து வெளியே வரும் பிரதமர் மோடி மதியம் 1 மணிக்கு அயோத்தியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். கோவில் வளாகத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பக்தர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். பிறகு மதியம் 2:10 மணிக்கு குபேர் கா திலா சிவன் கோவிலுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். பிறகு மதியம் 3.30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லி திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.