Thangam Thennarasu | ஒன்றிய அரசு "அம்மஞ்சல்லி" கூட தரவில்லை..!! நிதியமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. நிறைவு நாளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வரும் நிலையில், சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை அளித்தார். அதில், ”தமிழ்நாடு அரசுக்கு மாபெரும் தமிழ்க்கனவு உள்ளது. அதனை கருத்தில் கொண்டுதான் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் சமூக நீதி பிரதிபலிக்கிறது. மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்திற்கு ரூ.3,050 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரணமாக ஒன்றிய அரசு "அம்மஞ்சல்லி" கூட தரவில்லை. ஒன்றிய அரசு திட்டங்களின் பெயர்கள் பெரிதாக இருக்கிறதே தவிர, தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் தரவில்லை. குஜராத் வெள்ள பாதிப்புக்கு அள்ளிக் கொடுக்கும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுகிறது. தமிழ்நாட்டு மக்கள் திராவிட மாடல் அரசுக்கு ஆதரவளிப்பதால் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது. குஜராத் முதல்வராக இருந்தபோது மாநில உரிமைக்காக பேசிய மோடி, இப்போது மாநில உரிமைகளை மதிப்பதில்லை. பிரதமர் தூத்துகுடிக்கு வருவதற்கு முன்பே ஒன்றிய அரசு வெள்ள நிவாரண நிதியை வழங்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.