பேருந்து கவிழ்ந்தும் விடாத பயங்கரவாதிகள்..!! தொடர் துப்பாக்கிச்சூடு..!! நேரில் பார்த்தவர் ஷாக்கிங் தகவல்..!!
ஜம்மு-காஷ்மீரில் கோயிலுக்கு சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து பயங்கரவாத தாக்குதல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பயங்கரவாதிகள் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் பேருந்து சாலையை விட்டு விலகிச் சென்று விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான விசாரணையில், ஷிவ் கோரி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, போனி பகுதியில் உள்ள டெரியாத் கிராமத்தில் தாக்குதலுக்கு உள்ளானது என்று PIT செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளின் தாக்குதலில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 33 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் விஷேஷ் மகாஜன் உறுதி செய்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த பேருந்தில் பயணித்த டெல்லியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தாக்குதலில் காயமடைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து விவரித்துள்ளார். அவர் கூறுகையில், ”நான் டெல்லியில் இருந்து வந்துள்ளேன். கோயிலில் வழிபாடு முடித்துவிட்டு பேருந்தில் திரும்பி வந்துகொண்டிருந்தோம். அப்போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. நாங்கள் சென்ற பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது.
பேருந்து கவிழ்ந்த பின்னரும் துப்பாக்கிச்சூடு தொடர்ந்தது. நாங்கள் அனைவரும் பயந்து இருக்கைகளுக்கு அடியில் பதுங்கிக்கொண்டோம். யாரும் தலையை தூக்க வேண்டாம் என தொடர்ச்சியாக பலரும் கூக்குரல் கொடுத்துக்கொண்டிருந்தனர்" என்றார். இந்த சம்பவத்திற்கு ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி களம் நிலவரம் குறித்து கேட்டறிந்து வருவதாக துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் போலீசார், துணை ராணுவம் மற்றும் ராணுவத்தினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
Read More : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? மக்களே உங்களுக்கு செம குட் நியூஸ்..!!