For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செல்போன் பேசியபடி கார் ஓட்டி கைதான வழக்கில் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்

05:30 AM May 31, 2024 IST | Baskar
செல்போன் பேசியபடி கார் ஓட்டி கைதான வழக்கில் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்
Advertisement

செல்ஃபோன் பேசியபடி காரை ஓட்டி கைதான யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கடந்த 15ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு காரில் பயணித்த யூடியூபர் டி.டி.எஃப் வாசன், மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே செல்லும் போது, செல்போனில் பேசிக்கொண்டே காரை ஓட்டியுள்ளார். அஜாக்கிரதையாகவும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாகவும் செல்போனில் பேசிக்கொண்டே காரை ஓட்டிய அவர், அதனை வீடியோவாக எடுத்து Twin Throttlers என்ற தனது YOUTUBE சேனலில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து மதுரை மாநகர சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலரும், ஆயுதப்படை காவலருமான மணிபாரதி என்பவர் அளித்த புகாரின் கீழ் அண்ணாநகர் காவல் நிலையத்தில் டி.டி.எஃப். வாசன் மீது, அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்குதல்,பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், வேகமாக வாகனம் ஓட்டுதல், சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல்,மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறியது, பிறருக்கு மரணம் உண்டாகும் என்ற தெளிவுடன் ஒரு காரியத்தை செய்தல் (308) [இது பிணையில் வெளிவர முடியாத பிரிவு ஆகியவை உட்பட மொத்தம் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சென்னைக்கு சென்று டி.டி.எஃப். வாசனை கைது செய்த மதுரை அண்ணாநகர் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அவருக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் முழு உடல் மருத்துவ பரிசோதனை நடத்தி மதுரை மாவட்ட 6 வது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்புலெட்சுமி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரசுத்தரப்பு மற்றும் டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களை முன் வைத்தனர். இதில், டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் சங்கரநாராயணன் வைத்த வாதத்தில்,“டிடிஎப் வாசனால் எந்தவொரு தனிமனிதனும் பாதிக்கவில்லை. அது தொடர்பாக பாதிப்பு என புகாரும் அளிக்கவில்லை. சென்னையில் இருந்து காரில் சென்ற போது எந்த காவலரும் டிடிஎஃப் வாசன் விதிமீறல் குறித்து பார்க்கவில்லையா? 15ம் தேதி வீடியோவை பார்த்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜூன் 4ம் தேதி வாசன் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். யூட்யூப் வீடியோ பார்த்த காவலர் கொடுத்த புகாரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றபடி வாசனால் பொதுமக்கள் எந்த பாதிப்பும் அடையவில்லை. அண்மையில் நடந்த விபத்தால் வாசனுக்கு முதுகுவலி உள்ளது. மேலும் அவர் கண்ணாடி அணிந்துதான் வெளியே செல்ல முடியும்.

வாசன் தரப்பில் எங்கள் செயலுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தற்போது திருந்தி வாழ்ந்து வருகிறார் வாசன். படத்தில் நடிக்க 25 லட்ச ரூபாய் முன்பணம் வாங்கி உள்ளார். அவர் படித்த பட்டதாரி இளைஞர். குடும்பத்தை அவர்தான் கவனித்து வருகிறார். யூடியூபில் ஃபாலோவர்ஸ் உள்ளதால் அவரை பார்த்து இளைஞர்கள் கெட்டுப்போவதாக அரசுத்தரப்பு வாதத்தை ஏற்க முடியாது.விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட நடிகர்களுக்கு பலகோடி ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் புகை, மது, பைக்ரேஸ் போன்றவற்றை படங்களில் செய்கின்றனர். அதை பார்த்து ரசிகர்கள் கெட்டுவிடுவார்களா?
அரசாங்கம் மது விற்கிறது. மக்களுக்கு நல்லதுதானே அரசு செய்ய வேண்டும்? எனில் மது விற்பனை நல்லதா? உண்மையில் வாசன் மக்களுக்கு தலைக்கவசம் வழங்கியுள்ளார். மழை வெள்ள காலங்களில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட பல விழிப்புணர்வுகளை செய்துள்ளார். காவலர்கள் முன்னிலையில் தலைக்கவசம் கூட வழங்கியுள்ளார்” என்று கூறினார்.

இதனை தொடர்ந்து அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்,
“யூடியூபர் வாசன் தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்கி வருகிறார். ஏற்கெனவே வாகன விபத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றிருக்கிறார். இவரது ஓட்டுநர் உரிமம் பத்து ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதை மறைத்து மோசடியாக காரை இயக்குவதற்கு எல்.எல்.ஆர் பெற்றுள்ளார். தொடர்ச்சியாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாசன் நடத்திவரும் youtube சேனலில் 25 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் சப்ஸ்கிரைப்ராக உள்ளனர். இவர் பதிவு செய்யும் வீடியோக்களை பார்த்து இவரை ஃபாலோ செய்யும் இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது” என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி,
“போலீசார் காட்டிய வீடியோ உங்களுடையதா.? என்ன படித்துள்ளீர்கள்.? வேகமாக என் செல்கிறீர்கள்.?” என அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார். அதற்கு வாசன், ”நான் வேகமாக போகவில்லை, என் மீது காவல்துறை பொய்வழக்கு போட்டுள்ளர்கள். அது என்னுடைய வீடியோதான். நான் வேகமாக வாகனத்தை இயக்கவில்லை. எனக்கு தந்தை இல்லை. நான்தான் எனது தாய் மற்றும் சகோதரியை பார்த்துக்கொள்கிறேன். நான் BA ஆங்கிலம் பட்டப்படிப்பு படித்துள்ளேன்” என பதிலளித்தார். இதையடுத்து டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்புலெட்சுமி உத்தரவிட்டார்.

தன் நிபந்தனையில் நீதிபதி, “மன்னிப்புக் கடிதமும் ‘இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன்’ என்ற உத்திரவாத கடிதமும் நீங்கள் கொடுக்க வேண்டும். மட்டுமன்றி இனி இதுபோன்று செயலில் ஈடுபட மாட்டேன் என மன்னிப்புக்கோரி வீடியோ வெளியிட வேண்டும். அதனை உறுதிமொழி மற்றும் உத்தரவாதக் கடிதம் மூலமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் 10 நாட்கள் காலை 10 மணிக்கு கையெழுத்திட வேண்டும். காவல்துறையினர் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிஎஃப் வாசன், தந்த இன்னல்களுக்கும், பிரச்னைகளுக்கும் நன்றி. நீதி தேவதையை நம்பினேன். நீதி கிடைத்திருக்கிறது. நீதி தேவதைக்கு நன்றி. மிகப்பெரிய வரலாற்று வெற்றியை நேர்மையாக பெற்றிருக்கிறேன். மகிழ்ச்சியாக உள்ளது” என கூறிச்சென்றார்.

Read More: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மறைவு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் இரங்கல்..!!

Tags :
Advertisement