பைக், கார்களுக்கான வரி அதிரடி உயர்வு..!! வாகன பதிவில் சரிவை சந்திக்கும் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள்..!!
தமிழ்நாட்டில் உள்ள 150 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் யூனிட் அலுவலகங்களில் தினசரி இருசக்கர வாகனம் மற்றும் கார் என சுமார் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அப்போது, அந்த வாகனங்களின் விலையின் அடிப்படையில் அவற்றிற்கு வரி விதிக்கப்படுகிறது. கடந்த 2010இல் நிர்ணயிக்கப்பட்டதன்படி, பைக்கிற்கு 8 சதவிகிதமும், கார்களின் வகைகளுக்கு ஏற்றாற்போல் 10 - 15 சதவிகிதமும் வரி வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில், போக்குவரத்து ஆணையரகத்தின் பரிந்துரையின் பேரில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு வாகனங்களுக்கான சாலை வரியை கடந்த 9ஆம் தேதி தமிழ்நாடு அரசு உயர்த்தியது. நவம்பர் 9 முதல் புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு வரும் என கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய நாளில் இருந்து கடந்த 8ஆம் தேதி வரை நாளொன்றிற்கு சுமார் 5,700-க்கும் அதிகமான வாகனங்கள் பதிவாகின. அது தமிழ்நாடு ஆர்டிஓ அலுவலகங்களில் நடைபெறும் தினசரி பதிவில் புதிய உச்சமாக கூறப்படுகிறது.
அதேபோல், புதிய வரி முறை அமலுக்கு வந்த பிறகு வாகனங்களின் பதிவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றிற்கு சராசரியாக 4,400 வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னையில் பதிவாகும் வாகனங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 300-லிருந்து 880 ஆக சரிந்துள்ளது. இரு சக்கர வாகனங்களின் ஒட்டுமொத்த விலை குறைந்பட்சம் 5% வரை உயர்ந்துள்ளது. ஒரு சில வணிக வாகனங்களை வாங்குவதற்கு மக்கள் வரியாக மட்டும் ரூ.1 லட்சம் வரை செலுத்துகின்றனர்.
ஷோரூம்கள் தள்ளுபடிக வழங்கினாலும், வாகன உரிமையாளர்கள் அதிக வரிகளை செலுத்தி வருகின்றனர். காரணம், VAHAN போர்ட்டலில் உற்பத்தியாளர் நிர்ணயித்த விகிதத்தின் அடிப்படையில் அரசாங்கம் தொடர்ந்து வரியைக் கணக்கிடுகிறது. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை போல் அல்லாமல், தமிழ்நாடு அரசு எக்ஸ்-ஷோரூம் விலையின் அடிப்படையில் வாகன வரி வசூலிக்கிறது. இதில் 28% சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அடங்கும். இதனால் புதிய கார்கள் மற்றும் பைக்குகள் விலை உயர்ந்துள்ளது. இதனால் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விற்பனையும், கணிசமான பின்னடைவை சந்தித்துள்ளது.