சுவை மற்றும் சத்து நிறைந்த கொள்ளு குழம்பு ரெசிபி.! எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.!
தானிய வகைகளில் முக்கியமானது கொள்ளு. இதில் ஏராளமான புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இந்தக் கொள்ளுவை பயன்படுத்தி சுவையான மற்றும் எளிமையான குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம் .
இதற்கு கொள்ளு எடுத்து நன்றாக கழுவி 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் இதனை பிரஷர் குக்கரில் பத்து விசில் வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். பத்து விசில் வந்த பிறகு மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். கொதித்த பின்னர் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். கொள்ளு நன்றாக ஆறியதும் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் கொர கொரவென்ற பதத்தில் இருக்குமாறு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயில் ரெண்டு ஸ்பூன் துவரம் பருப்பு, ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும். இதனுடன் பத்து பல் பூண்டு மற்றும் 10 சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வறுக்கவும். இவற்றுடன் சிறிதளவு உப்பு மற்றும் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கிய பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக விழுது போல அரைத்து எடுக்க வேண்டும். இப்போது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இவை இரண்டும் நன்றாக வறுத்து வந்ததும் அதில் பத்து பல் பூண்டு மற்றும் பத்து சின்ன வெங்காயம் சேர்த்து வறுக்கவும். இவற்றுடன் கறிவேப்பிலை இலைகளையும் சேர்த்து வறுக்க வேண்டும்.
இந்த அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்த விழுது மற்றும் கொள்ளு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இவற்றுடன் 1 ஸ்பூன் மிளகாய் தூள் 1 1/2 ஸ்பூன் மல்லி தூள் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு சிறிதளவு புளி கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து 10 நிமிடம் விதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். 10 நிமிடம் கொதித்ததும் சுவையான கொள்ளு குழம்பு ரெடி. இதனுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பரி மாறினால் இட்லி, தோசை மற்றும் சோறு ஆகியவற்றிற்கு மிகச்சிறந்த காம்பினேஷனாக இருக்கும்.