கொட்டிக் கொடுத்த டாஸ்மாக் வருமானம்..!! கடந்த ஆண்டைவிட ரூ.1,734 கோடி அதிகரிப்பு..!!
டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ரூ.1,734 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதமானது பிப்ரவரி 22ஆம் தேதி வரை மட்டுமே நடந்தது. மக்களவைத் தேர்தல் காரணமாக, மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடத்தப்படாமல், சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் பாகமானது, ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், மது விற்பனை குறித்து தெரிவிக்கப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் 2023-24ஆம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம், ரூ.45,855.67 கோடியாக உள்ளது என தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டை விட ரூ. 1, 734 கோடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.