"1 ரூபாய் கொடுத்தால் 29 காசு தான் கிடைக்குது.." "இந்தியாவின் 'நம்பர் 1' மாநிலமாக தமிழ்நாடு" - கோவை விழாவில் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்.!
தமிழ்நாடு இந்தியாவின் முகமாக இருப்பதாக கோவையில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் 780 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டங்களை துவக்கி வைக்க கோவை சரவண பட்டியில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அவருடன் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர் நடராஜன் மற்றும் அமைச்சர்கள் கே.என் நேரு, முத்துச்சாமி ஆகிய வரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்குவதை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தோம் அதை தற்போது நிறைவேற்றி வருகிறோம் என தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின். தற்போது கோவை மாநகரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் 780 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆன திட்டங்களை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி எனக் கூறினார். மேலும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த ஒவ்வொரு திட்டங்களையும் தமிழக மக்களுக்கு வழங்குவதே விடியல் அரசின் முதல் நோக்கம் என குறிப்பிட்டார்.
இன்று ஒரு நாளில் மட்டும் 1419 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்களை தமிழகம் முழுவதும் செயல்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். கடந்த ஐந்து வருடங்களில் தமிழ்நாடு வரியாக ஆறு லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசிற்கு வழங்கியிருக்கிறது. ஆனால் மத்திய அரசு 1.58 லட்சம் கோடி மட்டுமே தமிழகத்திற்கு நிதி ஒதுக்கி இருக்கிறது நாம் 1 ரூபாய் கொடுத்தால் அவர்கள் 29 காசு தான் திரும்ப கொடுக்கிறார்கள். இந்த சவால்களை எல்லாம் எதிர்கொண்டு தமிழகம் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக முன்னேறி வருகிறது. மற்றும் மாநிலங்களுக்கும் உதாரணமாக தமிழ்நாடு செயல்படுகிறது .
தமிழ்நாடு செயல்படுத்தும் திட்டங்கள் தான் இந்தியாவை வழி நடத்துகிறது. மற்ற மாநிலங்களை விடவும் தமிழ்நாட்டில் அதிக வளர்ச்சி இருக்கிறது. தமிழக நகரங்கள் பெரும் வளர்ச்சியை கண்டிருக்கின்றன. உலக அரங்கில் இந்தியாவின் முகமாக தமிழ்நாடு இருக்கிறது. இன்னும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக கலைஞர் ஏற்படுத்திய பாதையில் விடியல் அரசு பயணிக்கிறது. கலைஞர் வாழ்ந்த ஊரில் இந்தத் திட்டங்களை செயல்படுத்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.