"மு.க.ஸ்டாலின் தலைமையில் அசுர வளர்ச்சி.." "ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி நகரும் தமிழ்நாடு.." முகேஷ் அம்பானி புகழாரம்.!
உலக அளவில் மிகப்பெரிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
2030 ஆம் வருடத்திற்குள் தமிழகம் ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு திட்டமாக சர்வதேச நாடுகளின் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வண்ணம் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்களின் வர்த்தக மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டிற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த தமிழக முதல்வர் சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பற்றி ரிலையன்ஸ் நிறுவன சேர்மன் முகேஷ் அம்பானி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோவில் உலக வர்த்தக மாநாடு மற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டி இருக்கிறார். அந்த மாநாட்டில் பேசியிருக்கும் முகேஷ் அம்பானி " தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு அரசு இந்தியாவிலேயே தொழில் செய்வதற்கு சிறந்த மாநிலமாக மாறி இருக்கிறது. ட்ரில்லியன் பொருளாதாரத்தை குறிக்கோளாகக் கொண்டு அவர்கள் தொழில் துறையிலும் வணிகத்திலும் முன்னேறி வருகின்றனர்.
இந்த மாநாட்டின் குறிக்கோளே ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்பதுதான். எங்களது ரிலையன்ஸ் நிறுவனமும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மற்றும் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றி வருகிறது. கடந்த வருடங்களில் தமிழகம் முழுவதும் 1300 ரிலையன்ஸ் அங்காடிகளை 25,000 கோடி முதலீட்டில் திறந்திருக்கிறோம். மேலும் தமிழகம் முழுவதிலும் ஜியோ செல் போன் மற்றும் இணையதள சேவை 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் எங்களுக்கு மூன்றரை கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார் .