ICC World T20 | உலகக்கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர்கள் நிராகரிப்பு.!! அதிருப்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்.!!
9-வது ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து நடைபெற இருக்கிறது . 20 நாடுகள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டி தொடர் வருகின்ற ஜூன் 2-ஆம் தேதி ஆரம்பமாகி 29ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் நாடுகள் தங்களது அணியின் வீரர்கள் பெயர் பட்டியலை வெளியிட தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய வீரர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
2024 ஆம் வருட டி20 உலக கோப்பை இந்திய அணியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு விராட் கோலி மற்றும் சஹால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டது. இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜெய் ஸ்வால் மற்றும் சிஎஸ்கே அணியின் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர் .
அனுபவ வீரர்கள் மற்றும் இளம்பிரர்களைக் கொண்ட கலவையாக இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த டி20 உலக கோப்பையில் இடம் பெறாத இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் இந்த உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளனர். சமீபகாலமாக காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்த சூரியகுமார் யாதவ் மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கிறார். கில் ரிங்கு சிங் ஆவேஷ் கான் மற்றும் கலில் அகமது ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வருட டி20 உலக கோப்பையில் தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம் பெறாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தமிழக வீரர்களான நடராஜன் சாய் சுதர்சன் தினேஷ் கார்த்திக் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் நடராஜன் நடப்பு ஐபிஎல் தொடரில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாட வருண் சக்கரவர்த்தி 11 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் சாய் சுதர்சன் 418 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் 268 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய 25 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும் தமிழக வீரர்கள் யாரும் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. 2022 ஆம் வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலும் தமிழக வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியும் உலகக்கோப்பை அணிக்கு அவர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.