சென்னையில் நாளை முதல் ஆட்டம் ஆரம்பம்.. இந்த தேதி வரை கனமழை வெளுத்து வாங்கும்.. பிரதீப் ஜான் ட்வீட்..
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை முதல் அதிகனமழையும், நாளை மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் அதிகனமழையும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 நாட்கள் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் நாளை முதல் சென்னையில் மழை சூடு பிடிக்க தொடங்கி டிசம்பர் 1 வரை நீடிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று தொடங்கும் மழை, அடுத்த 4-5 நாட்களுக்கு நீடிக்கும். நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சை மற்றும் ராமநாதபுரத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கைக்குக் கீழே அமைந்திருந்தது. இப்போது அது வடக்கே தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதால் நவம்பர் 30 அல்லது டிசம்பர் 1 வரை அடுத்த 4-5 நாட்களுக்கு தமிழக கடற்கரைக்கு அருகில் இருக்கும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மழை தொடங்கும். நாளை முதல் மழையின் அளவு அதிகரித்து டிசம்பர் 1-ம் தேதி வரை கனமழை நீட்டிக்கும். எனவே இந்த 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது பதிவில் “ நாம் கார்களை பாலங்களில் நிறுத்த வேண்டுமா, லாட்ஜில் தங்க வேண்டுமா, அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளையும் காலி செய்ய வேண்டுமா? என்றால் இல்லை. நான் அப்படி எதுவும் அறிவுறுத்தவில்லை, யாருக்கும் அப்படி அறிவுரை கூறியதில்லை.” என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கப்பட்டு மாவட்டங்களின் நீர் தேவைக்கு பூண்டியில் 15%, செம்பாவில் 59% மற்றும் ரெட்ஹில்ஸில் 71% மழை பெய்ய வேண்டும். 2025ல் சென்னைக்கு தண்ணீர் பிரச்சனை வருமா.இல்லை என்பதே பதில். இந்த மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கிறேன்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காற்று: இந்த காற்றழுத்த தாழ்வுநிலையில் காற்று ஒரு பிரச்சினை இல்லை. மழை மட்டுமே அச்சுறுத்தல். அடுத்து வரும் 4 - 5 நாட்கள் கடல் சீற்றமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.