PM MODI| "தமிழக மக்கள் அறிவாளிகள்; பாஜக மீது முழு நம்பிக்கை வந்து விட்டது" - பல்லடம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை.!
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று பல்லடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு உரை நிகழ்த்தினார்.
அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவை முன்னிட்டு பல்லடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பெரும் திரளான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர் இந்தக் கூட்டத்திற்கு வருகை புரிந்த பாரதப் பிரதமர் சூலூர் விமானப்படைத்தளத்தில் தனி விமான மூலம் வந்திறங்கி அங்கிருந்து மாநாட்டு திடலுக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி தமிழக மக்களும் தமிழ் மொழியும் அதன் கலாச்சாரமும் மிகவும் சிறப்பானது என தெரிவித்தார். தமிழ் மொழி மீது தான் கொண்ட பற்று காரணமாக ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் தமிழ் கவிதை படித்ததாகவும் தெரிவித்தார். தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் தனது தொகுதியான காசியில் தமிழ் சங்கம் அமைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கும் தனக்குமான பந்தம் அரசியலால் ஏற்பட்டதல்ல என்று கூறியவர் தனது மனதால் தமிழ்நாட்டை மிகவும் நேசிப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத போதும் தமிழ்நாடு எப்போதும் பாரதிய ஜனதா கட்சியின் மனதில் இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் பாஜகவின் பலத்தைக் கண்டு இவ்வளவு நாளும் தமிழ்நாட்டை கொள்ளை அடித்தவர்கள் அச்சமடைந்து இருப்பதாக தெரிவித்தார்.
தமிழக மக்கள் எந்த அளவிற்கு மனதால் சுத்தமானவர்களோ அதேபோன்று அறிவாளிகள் அவர்கள் நிச்சயமாக இந்த தேர்தலில் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவார்கள் எனவும் கூறினார். மேலும் என் மண் என் மக்கள் நடைபயணம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்த அவர் பாரதிய ஜனதா கட்சியின் பலத்தையும் அதிகரிப்பதாக கூறியிருக்கிறார்.