தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை..!! இவ்வளவு சிறப்பம்சங்களா..? என்னென்ன கிடைக்கும் தெரியுமா..?
தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிப்ரவரி மாதம் சட்டப்பேரவைக் கூட்டம் கூட உள்ள நிலையில், ஜனவரி 23ஆம் தேதியான இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தாண்டின் முதல் சட்டப்பேரவையின் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 2-வது வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், விரைவில் மக்களவை தேர்தலும் அறிவிக்கப்பட உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசும் வரும் பிப்ரவரி மாதத்திலேயே தனது 2024-25ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாட்டில் உள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மாநில மகளிர் கொள்கையில் இருப்பது என்னென்ன..?
* வளர் இளம் பருவத்தினர் இடையே ஊட்டச்சத்து குறைபாடுகள் மூலம் ஏற்படும் விளைவுகளை நேர் செய்வதுடன், ரத்த சோகை மற்றும் குறைந்த எடை போன்ற குறைபாடுகளை பாதியாக குறைப்பது.
* குடும்ப சூழ்நிலையால், வேலையிலிருந்து நின்ற 10,000 பெண்களுக்கு மீண்டும் வேலையில் இணைவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். இவர்களுடைய திறன் இடைவெளியைக் குறைப்பதற்கு பொருத்தமான தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் விட்ட இடத்தில் மீண்டும் வேலையில் சேர்வதற்கு தக்க வாய்ப்புகள் ஏற்படுத்தி தருதல்.
* ஒரு கோடி பெண்களை சுய உதவிக் குழு அமைப்பிற்குள் கொண்டு வருதல். விரிவான வலையம் (Network) மற்றும் வழிகாட்டிகள் உருவாக்குதல். தீவிர வழிகாட்டுதல் மூலம் வாழ்வாதார நிலையில் இருந்து குறைந்தபட்சம் ஒரு லட்சம் வாழ்வாதார அமைப்புகள் நிறுவனங்களாக நிலை உயர்த்தப்படும்.
* ஒவ்வொரு ஆண்டும் இடைநிற்றல்களை 10% குறைத்தல் மற்றும் மூன்றாம் நிலை சேர்க்கை விகிதத்தை ஒவ்வொரு ஆண்டும் 5% அதிகரித்தல்.
* நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பெண்கள் இடையே டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைக்க இணைய சேவைகள் அதிகரிக்கப்படும்.
* அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தற்காப்புக் கலைபயிற்சி.
* மகளிர் வங்கியை நிறுவுவதன் மூலம் 'வாழ்ந்து காட்டு பெண்ணே’ எனும் திட்டத்தின் கீழ் கடன் தேவைப்படும் பெண்களுக்கு கடன் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்துதல்.
நாட்டிலேயே முதன்முறையாக மகளிர் நலனுக்காக தனி கொள்கை தமிழ்நாடு அரசால் கொண்டு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.