தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!! - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 30) மற்றும் நாளை (ஜூலை 01) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 28°-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை மறுநாள் (ஜூலை 02) முதல் ஜூலை 06 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 04.07.2024 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில், 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டது.
Read more ; பால் விவசாயிகளுக்கு ரூ.3 ஊக்கத்தொகை…! அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்…!