For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"தமிழ்நாடுதான் முன்னோடி" - மே தினத்தின் பின்னணியும்… ரத்தத்தால் எழுத்தப்பட்ட வரலாறும்…!

04:50 AM May 01, 2024 IST | Baskar
 தமிழ்நாடுதான் முன்னோடி    மே தினத்தின் பின்னணியும்… ரத்தத்தால் எழுத்தப்பட்ட வரலாறும்…
Advertisement

ஒவ்வொன்றுக்கும் ஒரு அழகிய வரலாறு உண்டு. அப்படி மே தினத்திற்கு பின்னாடியும் ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. மே தினம் எப்போது உருவானது. முதன் முதலாக எப்போது உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Advertisement

உழைப்பு இல்லாமல் இங்கு எதுவும் உருவாகாது. உழைப்பால் தான் இந்த உலகமே உருவாகி இருக்கிறது. நாம் உண்ணும் உணவு முதல் அணியும் காலணி வரை ஒவ்வொன்றும் மனிதனின் உழைப்பால் உருவானவைகள். இன்று நவீன காலத்தில் இருக்கிறோம், ஆனால் உழைப்பாளிதான் இன்றும் உழைப்பாளியாகவே இருக்கிறான். உழைப்பாளிகளுக்கு அவர்களின் உழைப்புக்கான பிரதிபலன் கிடைக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.

8 மணி நேர வேலை, அடிப்படை ஊதியம், தொழிலாளர் வைப்பு நிதி, காப்பீடு, பெண்களுக்குப் பணியிடத்தில் கிடைக்கும் உரிமைகள், தொழிற்சங்கங்கள் என இன்று நாம் அனுபவிக்கும் அனைத்திற்கும் மே தினப் போராட்டமே விதையாய் அமைந்தது. அப்படி வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளர்களை போற்றும் விதமாக மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

மே தினத்தின் வரலாறு: 1800-களில் தொழிற்துறை வளர்ச்சி அடையத் தொடங்கிய காலகட்டத்தில் 20 மணி நேரம் வரை வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமை எனத் தொழிலாளர்கள் பல வகைகளில் சுரண்டப்பட்டனர். இந்தச் சுரண்டலை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடைபெற்றன. 1806-ம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் போராடத் தொடங்கியபோதே, அவர்கள் கடினமாக வேலை வாங்கப்பட்டது உலகிற்குத் தெரியவந்தது.

பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதல் தொழிற்சங்கமாகக் கருதப்படுகிறது. இந்தத் தொழிற்சங்கம் உருவான இரண்டு ஆண்டுகளுக்குப் பின்புதான் இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாகத் தொடங்கின. 10 மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முதன்முதலாக வைத்த பெருமையும் இந்த சங்கத்தையே சேரும். தொடர் போராட்டத்தின் எதிரொலியாக வேன் பியுரன் தலைமையிலான அமெரிக்க அரசு, அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 10 மணி நேர வேலை நாள் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் 10 மணி நேர வேலையை வலியுறுத்திப் போராடி அதில் வெற்றிக் கண்டனர். இதனைத் தொடர்ந்து குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் எல்லா வளரும் நாடுகளிலும் பரவத் தொடங்கியது. 1858-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் ‘8 மணி நேர வேலை, 8 மணி நேரப் பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடி அதில் வெற்றியும் பெற்றனர்.

1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களே மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணங்களாய் அமைந்தன. 1884, அக்டோபர் 7-ம் நாள் சிகாகோவில் நடைபெற்ற மாநாட்டில், அமெரிக்கா மற்றும் கனடா தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில், 1886-ம் ஆண்டு மே முதல் நாள் முதல், வேலை நாள் என்பது 8 மணி நேரம்தான் இருக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சில மாதங்களுக்குப் பின் 1885-ல் நடைபெற்ற மாநாட்டில், முந்தைய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை வளர்ந்து போராட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கின. 1886 மே ஒன்றாம் தேதி சிகாகோ நகரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு 8 மணி நேர வேலைக்காகப் போராடினர்.

இதனைத் தொடர்ந்து போராடியவர்களைக் கைது செய்தும், அடக்குமுறையைக் கையாண்டும் போராட்டத்தைக் கலைக்க அரசு முயன்றது. இந்த அடக்கு முறையை எதிர்த்து மே 4-ம் தேதி வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டத்தில் ராணுவ அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட, இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மோதலில் ஏழு போலீஸ்காரர்களும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர்.1886ஆம் ஆண்டின் பிற்பாதி முழுவதும் தொழிலாளர்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1889-ம் ஆண்டு மீண்டும் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. 1889-ம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற மாநாட்டில், எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தைச் சட்டப்பூர்வமாக்கக் கோரி போராடத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக 1890 மே முதல் நாள் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட நாளில் எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் அவர்களின் நாட்டு சூழ்நிலைக்கேற்ப ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என மாநாடு அறிவித்தது. இதனைத் தொடர்ந்தே ஐரோப்பா, ஜெர்மனி, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் தொழிலாளர் போராட்டங்கள் விரிவடைந்தன. 1890-ம் ஆண்டு பல ஐரோப்பிய நாடுகளில் மே தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் மே தினக் கொண்டாட்டம் சிறிது சிறிதாகப் பல்வேறு நாடுகளில் பரவியது.

தற்போது 80 நாடுகளுக்கும் மேல் மே 1ஆம் தேதியை தேசிய விடுமுறையாக அறிவித்துள்ளன. இந்தியாவின் மே தினம் முதல் முதலாகக் கொண்டாடப்பட்டது தமிழகத்தில்தான். இந்தியாவின் முதல் தொழிற்சங்கவாதியான சிங்காரவேலர், 1923-ம் ஆண்டு சென்னையில் மே தினக் கொண்டாட்டத்தை நடத்தினார். அதே போல இந்தியாவில் முதன்முதலில் மே தினத்திற்கு விடுமுறை அறிவித்தது கேரளாவில்தான். 1957-ம் ஆண்டு கேரளாவில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி மே தினத்திற்கு விடுமுறை அறிவித்தது. இப்படி போராட்டத்துடன் தொடங்கிய மே தினம் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது. தினந்தோறும் உணவை மறந்து தண்ணீரை மறந்து வியர்வை சிந்தி உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது 1 News Nation Tamil இணைய பிரிவு.

Read More: ECI: முதல் கட்டம் 66.14%, இரண்டாம் கட்டம் 66.71% வாக்குப்பதிவு: இறுதி வாக்காளர் எண்ணிக்கையை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்..!

Advertisement