இந்து மதம் என்றால் அரசியல் சாசனத்தை மீறும் தமிழக அரசு...! வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்...!
இந்து மதம் என்று வரும்போது மட்டும் அரசியல் சாசனத்தை மீறுகிறது தமிழக அரசு என வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில்; இந்து மத எதிர்ப்பை முதன்மை கொள்கையாகக் கொண்ட திமுக அரசு, இந்து கோயில்கள், திருவிழாக்கள், பண்டிகைகளுக்கு எந்தெந்த வழிகளில் தொந்தரவு செய்ய முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் தொந்தரவு செய்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாக்களை நடத்துபவர்களை, தீவிரவாதிகளைப் போல நள்ளிரவில் வீடுகளுக்குச் சென்று, விசாரணை என்ற பெயரில் காவல்துறை மூலம் அச்சுறுத்துகிறது.
இந்து மத கோயில்களை மட்டும் தன் பிடியில் வைத்திருக்கும் திமுக அரசு, தினசரி பூஜைகள், வழிபாடு என இந்துக்களின் அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமையில் தலையிடுகிறது. இந்து கோயில்களில் எப்படி பூஜை செய்ய வேண்டும், சுவாமிக்கு எப்படி அலங்காரம் செய்ய வேண்டும், எப்படி திருவிழாக்களை நடத்த வேண்டும் என்பதைக் கூட இந்துக்களால் தீர்மானிக்க முடியவில்லை. மதச்சார்பற்ற தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தான் இந்துக் கோயில்கள் தொடர்பான அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள்.
ஆண்டாள் பக்தர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக பௌர்ணமி நாளில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆடி பௌர்ணமி நாளில் அன்னதானம் வழங்குவதை காவல்துறையும் அறநிலையத்துறை அதிகாரிகளும் தடுத்துள்ளனர். அது மட்டுமின்றி, திருச்செந்தூர் கடலுக்கு செய்யப்படும் ஆரத்தி வழிபாட்டையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். கடல், ஆறு, மலைகள், மரங்கள் என இயற்கையை வழிபடுவது இந்து தர்மத்தின் முக்கிய அங்கமாகும். இதை தடுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் மதச்சார்பற்ற அரசு தலையிடுவது நமது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று கூறுபவர்கள், இந்திய அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்திக் கொண்டு பதவி ஏற்பவர்கள், இந்து மதம் என்று வரும்போது மட்டும் அரசியல் சாசனத்தை மீறுகின்றனர். இயற்கை வழிபாட்டு முறைகளுக்கு தமிழக அரசு இடையூறாக இருக்கக் கூடாது. இல்லையெனில் பக்தர்களின் கடும் கோபத்துக்கு ஆளாக நேரிடும். இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு காவல்துறைக்கும், இந்து சமய அறநிலைத்துறைக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.