விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கும் தமிழக அரசு...! இ-வாடகை செயலி மூலம் பதிவு செய்தால் போதும்... முழு விவரம்
தமிழகத்தில் சொந்த நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு, வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை இ-வாடகை செயலி மூலம் பதிவு செய்து, நிலமேம்பாடு, உழவு, விதைப்பு, அறுவடை, பண்ணைக் கழிவு மேலாண்மை போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை இ-வாடகை செயலியினை பயன்படுத்தி வாடகைக்குப் பெற்று, பணிகள் நிறைவடைந்த பின்னர், பணி முடிவுற்ற நிலப் பரப்பு துறை அலுவலர்களால் அளவீடு செய்யப்பட்டு, பின்னர் விவசாயி செலுத்திய மொத்த வாடகைத் தொகையில் 50 சதவிகித தொகை, பின்னேற்பு மானியமாக சம்பந்தப்பட்ட விவசாயியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
ஒரு விவசாயிக்கு 5 மணி நேரம். இவற்றுக்கான வாடகையில் எது குறைவோ அந்த வாடகை மானியமாக வழங்கப்படும். நன்செய் நிலமுடைய சிறு, குறு விவசாயிக்கு, அதிகபட்சமாக 2.5 ஏக்கருக்கு, ஒரு துக்கருக்கு ரூ.250/- வீதம், அதிகபட்சமாக ரூ.625/-வரை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மானியம் வழங்கப்படும். புன்செய் நிலமுடைய சிறு, குறு விவசாயிக்கு, அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு, ஒரு ஏக்கருக்கு ரூ.250/- வீதம் அதிகபட்சமாக ரூ.1250/- வரை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள், “உழவன் செயலியில்” இ வாடகை சேவை மூலமாகவோ இணையதளம் https://mts.aed.tn.gov/evaadagai/ மூலமாகவோ தங்களுக்குத் தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை முன் பதிவு செய்து வாடகைத் தொகையை செலுத்த வேண்டும். அச்செயலியில் சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் மற்றும் விவரங்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தின் சிட்டா, புல வரைபடம், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், ஆதார் அட்டையின் நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன் பக்க நகல் ஆகிய ஆவணங்களை கள ஆய்வு செய்யும் வேளாண்மைப் பொறியியல் துறையின் அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.