ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. ரேஷனில் இனி இந்த பொருளை தாராளமாக பெறலாம்..!!
ரேஷன் கடைகளில் கோதுமைக்கு தட்டுப்பாடு வந்துவிடுமோ என்ற லேசான கலக்கம் சூழ்ந்து வந்த நிலையில், தற்போது மகிழ்ச்சி தகவல் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இப்படியொரு அறிவிப்பு வந்திருப்பது, ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறது.
கோதுமை ஒதுக்கீட்டை பொறுத்தவரை, தமிழகத்துக்கு 1,038 டன்னாக இருந்த அளவினை மத்திய அரசு, கடந்த வருடம் திடீரென குறைத்துவிட்டது. பிறகு, தமிழக அமைச்சர்கள் நேரடியாகவே டெல்லி சென்று, மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியதையடுத்து, 8500 டன் கோதுமையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதற்குபிறகு, கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.. இந்த கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்று, தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை, மாதம் 8,500 டன்னில் இருந்து, 17,100 டன்னாக அதிகரித்து, மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழக ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அரிசிக்கு பதில் கோதுமையை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில், கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோவும், மற்ற இடங்களில், 2 கிலோ வரையும் கோதுமை வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பானது ரேஷன்தாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
இதனிடையே அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்காகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.