ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 2 வழக்கு...! இன்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு...
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த இரண்டு வழக்குகளில் இன்று முக்கிய உத்தரவு வெளியாக வாய்ப்புள்ளது.
தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையில் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. குறிப்பாக தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, பி. வில்சன், ஆளுநரின் குறுக்கீடு தொடர்பான கூடுதல் விவரங்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஆளுநர் விவகாரத்தை விசாரிக்கும் போது சேர்த்து விசாரிக்குமாறு வலியுறுத்தினர். அப்போது நீதிமன்றத்தில் இருந்த மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் வெங்கடரமணி, இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து நீதிபதிகள் விசாரணை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது, துணை வேந்தர் நியமனத்தில் குறுக்கீடு செய்வது குறித்து 2 வழக்குகளை தாக்கல் செய்து இருந்தது தமிழ்நாடு அரசு. கடந்த வார வழக்கு விசாரணையில், ஒரு வாரத்தில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், இல்லை எனில் தாங்களே இதற்கு தீர்வு காண முயற்சி செய்வோம் என நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில் இன்று இரண்டு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது.