தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ராஜினாமா..! அடுத்தது யார்..?
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக இரண்டு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து வந்த ஆர்.சண்முகசுந்தரம் தற்போது ராஜினாமா செய்துள்ளார். தமிழக அரசிடமும், முதல்வரிடமும் நேரடியாக தெரிவித்ததாகவும், அதை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசு தலைமை வழக்கறிஞராக கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்ட இவர், ஒரு வருடத்தில் தனது ராஜினாமாவை முதல்வரிடம் கொடுத்திருந்தார், அப்போது முதல்வர் தற்போது ராஜினாமா செய்ய வேண்டாம், தொடர்ந்து நீடியுங்கள் என்று தனிப்பட்ட முறையில் கூறியதன் காரணமாக, தற்போது வரை அரசு தலைமை வழக்கறிஞராக நீடித்து வந்தார், இந்நிலையில் தற்போது மீண்டும் முதல்வரிடம் தனது ராஜினமா மனுவை ஏற்கும்படி கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கையை முதல்வர் ஏற்றுள்ளதால் இரண்டு தினங்களுக்கு முன்னதாக ஆர்.சண்முகசுந்தரம் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியை ஆர்.சண்முகசுந்தரம் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய அரசு தலைமை வழக்கறிஞரை நியமிப்பதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு வழக்கறிஞர்கள் அணியில் மூத்த வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் பி.எஸ்.ராமன் அல்லது ஜே.ரவீந்திரன் ஆகியோரில் ஒருவர் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.