நாளை 3.30 மணிக்கு... தமிழகமே எதிர்பார்த்த அமைச்சரவை மாற்றம்...! வெளியான புதிய தகவல்...!
பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் நாளை 3.30 மணிக்கு அரங்கேற இருக்கிறது மூத்த பத்திரிகையாளர் லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் திமுக அமைச்சரவையில் செந்தில் பாலாஜிக்கு இலாகா ஒதுக்கப்பட்டது. குறிப்பாக, அவருக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மின்சாரத் துறை ஆகிய இரு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. தற்பொழுது செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.
திமுகவில் பல மாதங்களாக பேசப்பட்டு வந்த அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போவதற்கு முக்கியமான காரணமாக செந்தில் பாலாஜியின் ஜாமீனும் சொல்லப்பட்டது. தற்போது ஜாமீனில் வெளியாகியிருக்கும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தடையில்லை. ஆகவே, விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் ஸ்டாலின் உட்பட 35 அமைச்சர்கள் இடம்பெறலாம். தற்போது 34 அமைச்சர்கள் இருக்கின்றனர். இதில் மேலும் ஒருவராக செந்தில் பாலாஜி இணைக்கப்படுவார். அவருக்கு ஏற்கெனவே வழங்கிய மின்சாரத் துறை வழங்கப்படலாம் என்னும் பேச்சு அடிபடுகிறது. இது தவிர, முன்பு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெறலாம் என தகவல் கசிந்துள்ளது. சீனியர்கள் மாற்றப்பட்டு புதிதாக ஜூனியர்கள் உள்ளே வருவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் லக்ஷ்மணன் தனது எக்ஸ் தளத்தில்; பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் நாளை பிற்பகல் 3.30-க்கு அரங்கேற இருக்கிறது. மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக மூன்று பேர் அமைச்சராக இருக்கிறார்கள். முதல் முறையாக உயர்கல்விக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். நிஜமாகவே சமூக நீதியை வலுப்படுத்தும் ஏற்பாடு இது என தெரிவித்துள்ளார்.