உதயநிதி துணை முதல்வர்... சிலருக்கு மட்டும் சூரியன் உதிக்கிறது..! அண்ணாமலை கடும் விமர்சனம்...!
உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டதன் மூலம் அதிகாரம் படைத்த சிலருக்கு மட்டும் சூரியன் உதிக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றார். திமுகவில், 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு, ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பால் வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காலநிலை மாற்றம் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 6 பேரின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தமிழக அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோ.வி.செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் நேற்று பதவியேற்றனர். இந்த நிலையில் உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டதன் மூலம் அதிகாரம் படைத்த சிலருக்கு மட்டும் சூரியன் உதிக்கிறது என தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை விமா்சித்துள்ளாா்.
இது குறித்து அவர் தனது‘எக்ஸ்’ தளத்தில்; உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டதன் மூலம் கடந்த 40 மாதங்களாக அதிகாரம் படைத்த சிலருக்கு மட்டும் சூரியன் உதிக்கிறது. மற்றவர்களுக்கு சூரிய கிரகணம் மட்டுமே தெரிகிறது. தமிழக மக்களுக்கு விடியல் என்றால் என்னவென்று இப்போது புரிந்திருக்கும். தனக்கு, தன் குடும்பத்துக்கு, தங்கள் தலைவா்களுக்கு மட்டுமே விடியல் ஏற்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.