தமிழக பாஜக யாருக்கு..? தமிழிசைக்கு மட்டுமல்ல அண்ணாமலைக்கும் செம டோஸ்..!! ஓரிரு நாளில் வெளியாகும் அறிவிப்பு..!!
தமிழக பாஜகவின் தற்போது நிலை குறித்து அறிக்கை அளிக்க அண்ணாமலைக்கும், பிற மூத்த தலைவர்களுக்கும் பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மக்களவை தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக பாஜகவில் அண்ணாமலை அணி, தமிழிசை அணி உருவாகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், பொது மேடையில் வைத்து தமிழிசையை அமித் ஷா கண்டித்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில், தமிழக பாஜகவின் தற்போது நிலை குறித்து அறிக்கை அளிக்க அண்ணாமலைக்கும், பிற மூத்த தலைவர்களுக்கும் பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை 4 முனை போட்டி நிலவிய நிலையில், தற்போது திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை கைப்பற்றியுள்ளது. இந்த கூட்டணி தவிர்த்து, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை மக்களவைத் தேர்தலில் களம் கண்டன. இந்த இரண்டு கூட்டணிகளும், நாம் தமிழர் கட்சியுமே படுதோல்வியை சந்தித்தது அரசியல் களத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.
அதிமுக-பாஜக கூட்டணி முறிந்ததால் தான் இரு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் அண்ணாமலை தான் என சமூக வலைதளங்களில் 'சில' பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அண்ணாமலை மீது பல பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேசியபோது, அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கு காரணம் அண்ணாமலை தான். அவர் அதிமுகவினரையே விமர்சித்தார். கட்சியின் மூத்த தலைவர்களை விமர்சித்தார். இதன் காரணமாக கூட்டணி அமையாமல் போனது. இதனால் தான் பாஜக படு தோல்வியை சந்தித்தது என கூறியிருந்தார். அவரது கருத்தை தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்று பேசியிருந்தார்.
இதனால் அதிமுக - பாஜக கூட்டணி முடிவுக்கு காரணம் அண்ணாமலை தான் எனவும் வாக்கு சதவீதங்களை வைத்து அண்ணாமலை தலைமையை ஏமாற்றி வருகிறார் என்கின்றனர் பாஜகவினர். இதையெல்லாம் விட கட்சியில் ரவுடிகள் இருப்பதாக தமிழிசை பேசியது மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தனர். தமிழிசைக்கு ஆதரவாக சிலர் பேச கட்சிக்குள் இரு அணிகள் உருவானது.
இந்நிலையில் தான், ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து மேடையிலேயே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டிப்புடன் விவாதித்தார். தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை- தமிழிசை தரப்பு இடையேயான மோதல் குறித்த அப்போது அமித்ஷா அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த விவகாரம் பெரிய அளவில் பேசு பொருளாகி உள்ளது. இது தமிழிசைக்கு மட்டுமல்ல அண்ணாமலைக்கும் கட்சியில் சிக்கல் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது தமிழக பாஜகவில் நிலவும் தற்போதைய பிரச்சனை குறித்து அண்ணாமலை விளக்கம் அளிக்குமாறு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாம். தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருவதாக அண்ணாமலை கூறினாலும் அவரது நடவடிக்கைகள் கட்சிக்கு எதிராக இருப்பதாகவும் குறிப்பாக மூத்த தலைவர்களை வார் ரூம் மூலம் அவர் சமூக வலைதளங்களில் விமர்சிப்பது என பல்வேறு புகார்கள் மேல் இடத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அண்ணாமலையின் நடவடிக்கைகள், தேர்தலில் அவரது செயல்பாடுகள், தமிழக பாஜகவில் ஏற்பட்டிருக்கும் மோதல், தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு உள்ளிட்ட காரணங்கள் குறித்து அறிக்கை அளிக்குமாறு பாஜக மேலிடம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி சென்ற போது, கட்சியின் மூத்த தலைவர்கள் தனது பேச்சை கேட்பதில்லை. கட்சி அதிகாரத்தை தனக்கு முழுமையாக அளித்தால் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற வைப்பேன் என மேலிடத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களில் தமிழக பாஜகவில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
Read More : ’விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கும் விஜய் கட்சி’..!! புஸ்ஸி ஆனந்த் சொன்ன பரபரப்பு தகவல்..!!