சட்டத்துறையில் இருந்து பெண்கள் நீக்கம்..!! கடந்த ஆட்சியில் பெற்ற விவாகரத்து ரத்து..!! என்ன நடக்கிறது ஆப்கானிஸ்தானில்?
தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் ஆப்கானிஸ்தானின் சட்ட அமைப்பை மாற்றியமைத்து வருகின்றனர். அந்த வகையில், பழைய ஆட்சியின் கீழ் வழங்கப்பட்ட சில விவாகரத்துகள் செல்லாது என்று அறிவிக்கப்படுகின்றன. இது மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது பெண்களை மீண்டும் அவர்கள் விரும்பாத திருமணங்களை வாழ தள்ளப்படுகின்றனர். மேலும் பெண் நீதிபதிகள் சட்ட அமைப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நஸ்தானா என்ற பெண்ணின் தந்தை கூறுகையில், ”நஸ்தானாவின் திருமணம் அவருக்கு பிடிக்காத ஒருவருடன் நடந்தது. அந்த நேரத்தில் நஸ்தானாவுக்கு ஏழு வயது. குடும்பப் பகையைத் தீர்த்து வைப்பதற்காக பருவம் அடைந்ததும் உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தோம். நஸ்தானாவுக்கு அவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாததால், 15 வயதானபோது எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தோம். இருவரும் பிரிந்து வாழ மனுதாக்கல் செய்து, கடந்த ஆட்சியில் விவாகரத்தும் கிடைத்தது.
இதைக்கொண்டாடும் விதமாக எங்கள் கிராமத்தில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தோம். உள்ளூர் மசூதியில் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு விருந்து வழங்கப்பட்டது. ஆனால் ஒரு வருடம் கழித்து தாலிபன் அதிகாரத்தை கைப்பற்றியது. தற்போது தாலிபன் அமைப்பில் உறுப்பினராக சேர்ந்துள்ள அவரது முன்னாள் கணவர், முந்தைய அரசின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அதனைத்தொடர்ந்து, நீதிமன்றம் முந்தைய தீர்ப்பை ரத்து செய்து, நஸ்தானா உடனடியாக தனது முன்னாள் கணவர் ஹெக்மத்துல்லாவிடம் திரும்ப வேண்டும் என்று ஆணையிட்டது. இதனால் சொந்த ஊரைவிட்டு வெளியேறிய நஸ்தானா தனது சகோதரருடன் அண்டை நாட்டிற்கு தப்பிச் சென்றார்” எனக் கூறினார்.
2021 ஆகஸ்ட் மாதம் தாலிபன் அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தீர்க்கப்பட்டதாகக் கூறிக்கொள்ளும் சுமார் 3,55,000 வழக்குகளில் நஸ்தானாவின் வழக்கும் ஒன்று. இதில் பெரும்பாலானவை கிரிமினல் வழக்குகள் என்று தாலிபன் கூறுகிறது. சுமார் 40% வழக்குகள் நிலம் தொடர்பான தகராறுகள் என்றும் 30% வழக்குகள் விவாகரத்து உட்பட குடும்ப பிரச்சனைகள் என்றும் அது தெரிவிக்கிறது.
சட்டத்துறையில் இருந்து பெண்கள் நீக்கம்..
தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், கடந்த கால ஊழலை ஒழித்து நீதி வழங்குவோம் என உறுதியளித்தனர். திட்டமிட்ட முறையில் எல்லா நீதிபதிகளையும் நீக்கிய அவர்கள் பெண்கள் நீதித்துறையில் பங்கேற்க தகுதியற்றவர்கள் என்றும் அறிவித்தனர்.
சீர்தூக்கிப்பார்க்கும் அளவிற்கு பெண்களுக்கு தகுதியோ, புத்திசாலித்தனமோ இல்லை. ஏனெனில் எங்கள் ஷரியா கொள்கைகளின்படி நீதித்துறை பணிக்கு உயர் புத்திசாலித்தனத்துடன் இருக்கும் நபர்கள் தேவை,' என்று தாலிபன் உச்ச நீதிமன்றத்தின் வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பு இயக்குனர் அப்துல்ரஹிம் ரஷித் தெரிவித்தார்.
தாலிபன்களால் நீக்கப்பட்ட பெண் நீதிபதிகளில் ஆப்கானிஸ்தான் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஃபவ்சியா அமினியும் ஒருவர். நஸ்தானா போன்ற பெண்கள் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார் அவர். "ஒரு பெண் தன் கணவரை விவாகரத்து செய்து, நீதிமன்ற ஆவணங்கள் அதற்கு ஆதாரமாக இருந்தால் அது இறுதியானது. ஆட்சி மாறுவதால் சட்டத் தீர்ப்புகள் மாறாது." என்றார். மேலும், பெண் நீதிபதிகளை நீக்குவது, பெண்களுக்கான புதிய சட்டப்பாதுகாப்பு கொண்டுவரப்படுவதை நிறுத்திவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் நீதித்துறையில் முக்கிய பங்கு வகித்தோம். உதாரணமாக 2009 இல் கொண்டுவரப்பட்ட ’பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் சட்டம்’ எங்கள் சாதனைகளில் ஒன்றாகும். பெண்களுக்கான தங்குமிடங்களை ஒழுங்குபடுத்துதல், ஆதரவற்றவர்களுக்கான பாதுகாவலர் சட்டம் மற்றும் மனித கடத்தல் தடுப்புச்சட்டம் போன்றவற்றிலும் நாங்கள் பணியாற்றினோம்”என்கிறார்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆப்கானிய சட்ட அமைப்பின் உயர்மட்டத்தில் பணியாற்றிய பிறகு, நீதிபதி அமினி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததும் தான் முன்பு தண்டித்த ஆண்களிடமிருது தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக அவர் கூறுகிறார்.
பெண்கள் சுதந்திரமாக இருக்க உரிமை இல்லையா?
அண்டை நாட்டிற்கு தப்பிச் சென்றதிலிருந்து நஸ்தானா இரண்டு பரபரப்பான சாலைகளுக்கு இடையே இருக்கும் நடைப்பாதையில் ஒரு மரத்தடியில் தங்கியிருக்கிறார். இறுக்கமாக கட்டப்பட்ட ஆவணங்களை மார்போடு அணைத்தபடி அவர் அமர்ந்திருக்கிறார். திருமண பந்தம் இல்லாத சுதந்திரமான பெண் என்ற அடையாளத்திற்கான ஒரே ஆதாரம் அதுதான். உதவி வேண்டி ஐ.நா உட்பட பல கதவுகளை நான் தட்டினேன். ஆனால் யாரும் என் குரலைக் கேட்கவில்லை. ஆதரவு எங்கே? ஒரு பெண்ணாக நான் சுதந்திரமாக இருக்க எனக்கு உரிமை இல்லையா?" என்று வினவுகிறார் நஸ்தானா.
Read more ; வருஷத்துல எல்லா நாளுமே இங்கு மழை தான்..!! விசித்திர நகரத்தின் பின்னணி என்ன?