'மல்டி-வைட்டமின்' உட்கொள்வது மரண அபாயத்தை அதிகரிக்கும் - ஆய்வில் தகவல்!!
நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நம் உணவில் இருந்தே பெறுகிறோம். இருப்பினும் சிலருக்கு ஒரு சில ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் அவர்களுக்கு மல்டி வைட்டமின் என்று கருதப்படும் கூடுதல் சப்ளிமெண்ட்கள் தேவைப்படுகிறது. ஆனால் தினசரி மல்டிவைட்டமின்களை உட்கொள்வது மக்கள் நீண்ட காலம் வாழ உதவாது எனவும், ஆரம்பகால மரணத்தின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
நீங்கள் ஏதேனும் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டுமா என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்த ஒரு விரிவான மதிப்பீட்டிற்கு ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது உங்கள் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் மல்டிவைட்டமின் தேவையா என்பதையும், தேவைப்பட்டால் ரத்தப் பரிசோதனைகள் தேவையா என்பதையும் அவர்கள் வழிகாட்ட முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
‘ஜாமா நெட் ஒர்க் ஓபன்’ என்பதில் வெளியான இந்த ஆய்வில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக 4,00,000 ஆரோக்கியமான பெரியவர்கள் உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவில் ’நீண்ட ஆயுளை மேம்படுத்த மல்டி வைட்டமின் பயன்பாடு உதவவில்லை" என்று கண்டறியப்பட்டது. நீண்ட காலம் வாழ்வதற்குப் பதிலாக, மல்டிவைட்டமின்களை எடுத்துக் கொண்டவர்கள் 4 சதவீதம் அதிகமாக உயிரிழக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மல்டிவைட்டமின்களின் விலை அதிகமில்லை என்பதால், அவற்றை நேரடியாக எடுத்துக்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. இதற்கு பதிலாக இனி உணவில் இருந்து கிடைக்கும் வைட்டமின்களை உடல் கிரகிக்க வழி செய்வதே சிறப்பு எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ’நமது உணவில் அதிக காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் அல்லது பருப்பு வகைகளைச் சேர்ப்பது, சிவப்பு இறைச்சி உட்கொள்ளலைக் குறைப்பது, பணியின் பெயரில் சதா உட்கார்ந்திருக்கும் நேரத்தைக் குறைப்பது, மது அருந்துவதைக் குறைப்பது ஆகியவற்றின் மூலம் நமது நோக்கம் பலிதமாகும்’ என்றும் ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளனர்.
மல்டிவைட்டமின்களுக்கான சரியான அளவு என்ன?
மல்வி வைட்டமின்களுக்கான அளவு உங்கள் வயது, பாலினம், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் போன்ற பல காரணிகளைப் பொறுத்தது, எனவே அதைத் தீர்மானிப்பதற்கு முன்பு ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது முக்கியமானது. நீங்கள் சிறந்த ஆரோக்கியம் மற்றும் பிற உடல்நலக் குறைபாடுகள் இல்லாத ஒருவராக இருந்தால், உணவுக்குப் பிறகு ஒரு மல்டிவைட்டமின் மாத்திரையை சாப்பிடுமாறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Read more ; கொடைக்கானல், ஊட்டி செல்வோருக்கு மீண்டும் சிக்கல்..!! உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!