T20 உலகக்கோப்பையை தட்டித்தூக்கிய நியூசி., வீராங்கனைகள்!. முதல் முறையாக வென்று அசத்தல்!
Womens T20 World Cup: மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது.
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்றுவந்தது. மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் மோதின. அணிகள் ஏ மற்றும் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியிலும் 5 அணிகள் இடம்பெற்றன.
லீக் சுற்றுகளின் முடிவில் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முதல் 2 இடங்களை பிடித்ததன் அடிப்படையில் அவை அரையிறுதிக்கு முன்னேறின. மற்ற அணிகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் தொடரிலிருந்து வெளியேறியது.
பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை தென்னாப்பிரிக்காவும், வெஸ்ட் இண்டீசை நியூசிலாந்தும் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதன்படி இறுதிப்போட்டி, துபாயின் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கி நியூசிலாந்து மகளிர் அணியின், தொடக்க வீராங்கனையான ஜார்ஜியா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீராங்கனை ஆன சுசி பேட்ஸ் அவரது பங்கிற்கு 32 ரன்கள் விளாசி சிறிது நேரம் விளையாடி ஆட்டமிழந்தார். அதன் பின், 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அந்த அணியின் நட்சத்திர வீராங்கனையான அமிலியா கெர் அதிரடியாக விளையாடி 43 ரன்கள் சேர்த்தார்.
அதைத் தொடர்ந்து, இறுதி கட்டத்தில் களமிறங்கிய ப்ரூக் ஹாலிடே அதிரடியாக விளையாடி அவரது பங்கிற்கு 38 ரன்கள் சேர்த்தார். அதன்படி, 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக, நோன்குலுலேகோ ம்லபா 2 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து, 159 ரன்கள் எடுத்தால் கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் நல்ல ஒரு தொடக்கத்தை அமைத்தனர். ஆனாலும், துரதிஷ்டவசமாக அணியின் தொடக்க வீராங்கனையும், கேப்டனுமான லாரா 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள். நியூசிலாந்து அணியின் கடுமையான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 126 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால், 32 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து மகளிர் அணி வெற்றிப் பெற்று அசத்தியது. மேலும், கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரை வென்று வரலாற்றில் தங்களது பெயரையும் இடம்பெற செய்துள்ளது நியூஸிலாந்து மகளிர் அணி என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: அதிர்ச்சி!. இந்தியாவில் பரவிய மர்மநோய்!. ஒரே மாதத்தில் 17 குழந்தைகள் பலி!