தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு சலுகை விலைகளில் இனிப்பு...! ஆவின் அசத்தல் அறிவிப்பு
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, சிறப்பு சலுகை விலைகளில் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்ய உள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு, கார விற்பனை தொடங்கியுள்ளது. ஆவின் நிறுவனம் நிகழாண்டில் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக் காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகள் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக, ஆவின் ஒன்றியங்களில் பால் பொருட்கள், இனிப்பு வகைகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பெரியளவில் கொண்டாடப்படும் இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதிய சலுகை விலைகளில் (காம்போ ஆஃபர்) இனிப்பு, கார வகைகள் விற்பனையை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த சிறப்பு சலுகைகளைப் பயன்படுத்தி ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை குதூகலமாகக் கொண்டாடுங்கள் எனவும் ஆவின் நிர்வாகம் தமது வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மைசூர் பாக்கு, மிக்சர், ஆவின் குக்கீஸ், சாக்லேட் ஆகியவை அடங்கிய காம்போ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நெய் பாதுஷா, பாதாம் மிக்ஸ், குலோப் ஜாமுன், சாக்லேட், மிக்சர் சிறப்பு காம்போ ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. காஜூ பிஸ்தா ரோல், காஜூ கட்லி, நெய் பாதுஷா, முந்திரி அல்வா ஆகியவை அடங்கிய சிறப்பு காம்போ ரூ.900க்கு விற்பனை செய்யப்படுகிறது.